பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

47

மெர்டித் வெகு வேகமாக ஓடத் தொடங்கிவிடவேண்டும். எல்லோரும் அந்த வேகத்திற்கு இணையாக ஓடி, களைத்துப்போய் விடுவார்கள். ஆனால், தான் மட்டும் தன்னுடைய பயிற்சியில் கடைபிடித்த வேகத்துடனே ஓடி, முதலாவதாக வந்துவிட வேண்டும் என்பதுதான்.

ஜேம்ஸ் மெர்டித்துக்கும் தெரியும். இருந்தாலும், தன் தோழன் வெற்றி பெற்றால் தன் நாட்டுக்குத் தானே அந்தப் பெருமை போகிறது, தங்கப் பதக்கம் வருகிறது என்ற தாயகப் பற்றினால்தான் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டான்.

ஓட்டப் பந்தயம் தொடங்கிவிட்டது. ஏற்பாட்டின்படியே, ஜேம்ஸ் வேகமாக ஓடத் தொடங்கினான். எல்லோரும் அவன் பின்னே ஓடினார்கள். மெல்வினுக்கு மகிழ்ச்சிதான். அவனும் ஓடிக்கொண்டிருந்தான். தன் திட்டம் பலிக்கிறது என்ற தன்னம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தான்.

என்றுமில்லாத புதிய வேகத்தில் ஓட்டத்தைத் தொடங்கிய ஜேம்ஸ் மெர்டித்தும், ஓடிக்கொண்டேதான் இருந்தான். அதாவது, அனைவருக்கும் முன்னாலேதான் ஓடிக்கொண்டிருந்தான். ‘தான் களைத்துப் போவோம். பின் தங்கி விடுவோம். தன் தாயகத் தோழன் முதலாவதாக வந்துவிடுவான்’ என்ற நினைவுடன் தான் அவனும் ஒடிக் கொண்டேயிருந்தான்.

என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை, எந்த சக்தியின் துாண்டுதலோ தெரியவில்லை. அவன் களைக்கவுமில்லை, ஓட்டத்தில் சளைக்கவுமில்லை. பின் தங்கவும் இல்லை. முதலாவதாகவே ஓடி முடித்துவிட்டான். தங்கப் பதக்கத்தையும் பெற்றுவிட்டான்.