பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

61

குறுக்கு வழியில் சென்றேனும் அவனது இன்பத்தைக் குலைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிவிட்டார்கள். அந்த சதித் திட்டத்தின் கீழேதான், தங்கப்பதக்கங்களை உடனே திருப்பித்தர வேண்டுமென்ற சட்டம் பிறந்தது. சட்டத்தைப் பிறப்பித்தது அமெரிக்க ஒலிம்பிக் கழகமாகும்.

‘ஒலிம்பிக் பந்தயங்கள் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே, நீ காசு வாங்கிக்கொண்டு தளப்பந் தாட்டம் ஆடியதாகத் தெரிகிறது. அதனால் நீ அமெச்சூர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டாய். அமெச்சூர் விளையாட்டு வீரர்கள் தான் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ள முடியும். ஆகவே, நீ ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றாலும், வெற்றிவீரன் என்ற பட்டத்தை இழக்கிறாய். தங்கப் பதக்கங்கள் உன்னிடம் இருப்பது தவறு. திருப்பித் தந்துவிடு' என்ற கட்டளையைப் பிறப்பித்து விட்டது கழகம்.

அத்துடன் நில்லாது, அந்தக் கழகத்தின் ஆத்திரக்காரர்கள் மூன்றுபேர் ஒன்று சேர்ந்து ஸ்வீடன் ஒலிம்பிக் கழகத்திற்கும் கடிதம் அனுப்பி,'எங்கள்நாட்டு ஜிம்தோர்ப் வெற்றியை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வெற்றி வீரர்கள் பட்டியலிலிருந்து அவனது பெயரை எடுத்துவிடலாம்' என்றும் சிபாரிசு செய்துவிட்டனர்.

"பணம் வாங்கிக்கொண்டு நான் விளையாடவே இல்லை. இது யாரோ கட்டிவிட்டக் கட்டுக்கதை. என் பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்றுகூறிய கற்பனை” என்றெல்லாம் வாதாடிப் பார்த்த வீரனது பேச்சை, கேட்பார் இல்லை. மலையடிவாரத்தில் நின்று கத்தியிருந்தாலும் எதிரொலியாவது வந்திருக்கும். மலை போன்ற மனம் படைத்தவர்களிடம் கத்தி என்னபயன்?