பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

63

கிடைத்த பொருளே உயர்ந்தது. இன்னொருவர் பொருள் எனக்குத் தேவையேயில்லை. அதற்குரியவன் ஜிம்தோர்ப்தான். நானல்ல' என்று ஏற்றுக்கொள்ள மறுத்தான் வீஸ்லேண்டர் என்னும் வீரன்.

தங்கப் பதக்கம் என்றதும் தாவிக் குதித்துக் கொண்டு வந்து, தலை குனிந்து நின்று அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறந்த விளையாட்டு வீரன்தான் அவன் என்று, மாற்றாரையும் மதித்துப் போற்றும் தன்மானத் தங்கமாகத் திகழ்ந்தான் வீஸ்லேண்டர். அதனால் தான் அவன் சரித்திரத்தில் சாகாவரம்பெற்றத் துருவனாகத் திகழ்கிறான்.

வஞ்சகர்கள் விரித்த வலையானது 1913லிருந்து 1973வரை தொடர்ந்தது. 60 ஆண்டுகள் கழித்து, ஜிம்தோர்ப் வெற்றி வீரன்தான் என்று அமெரிக்க ஒலிம்பிக் கழகம் ஏற்றுக்கொண்டு அறிவித்தது. அறிவித்து என்ன பயன்? அதைக் கேட்க அவன் இல்லையே! விளையாட்டுத் துறையில் ஈடு இணையில்லாமல் இருந்த வீரன், இறுதி நாட்களில் வறுமையில் வாடி வதங்கி, மடிந்து போனான். செத்தும் புகழ்பெற்ற ஜிம்தோர்ப்புக்கு மேலாக, வெள்ளிப் பதக்கமே மேல் என்று தங்கத்தைத் தள்ளிவிட்டத் தன்மானத் தங்கமாகத் திகழும் ஸ்வீடன் தேசத்து வீஸ்லேண்டரையும் வணங்குவோம்.

நல்ல குணங்களை வளர்க்கும் விளையாட்டுக்களில், நயமார்ந்த குணாளனாக வாழ்ந்த வீஸ்லேண்டரைப் போல, உலகம் முழுதும் வீரர்கள் தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான இன்பம் விளையாட்டுக்களில் உலவும் என்று நம்பி, தன்மானத் தங்கத்தை வாழ்த்தி மகிழ்வோமாக!