பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

79

எவ்வளவு வல்லமையும் பயிற்சியும் பெற்றிருந்தால் இவன் இப்படித் தோற்றமளிக்கமுடியும் என்றும் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெற்றி வீரன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓட்டக்காரனை, பரிசு வழங்க இருக்கும் மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் பவ்யமாக பரிசு பெறச்சென்றான். அவன் முகத்திலே குறும்புத்தனமான குதுகலம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. வெற்றி பெற்றதால் ஏற்பட்ட செருக்கா? தன்னை மீறி எழுந்த தலைக்கனமா? அவனன்றி யார் அறிவார்?

அமெரிக்க நாட்டின் சார்பாக, ஜனாதிபதி ரூஸ்வெல்டின் மகளான ஆலிஸ் ரூஸ்வெல்ட் தான் அன்றைய தினம் பரிசினை வழங்கிக்கொண்டிருந்தாள். தன் நாட்டு வீரன் இம்மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான் என்பதிலே ஆலிசுக்கும் மகிழ்ச்சியே! ஆன்ற புகழ் தரும் பரிசான ஆலிவ் மலர் வளையத்தை தலையில் சூட்டி, தங்கப்பதக்கத்தைத் தர இருக்கின்ற நேரத்தில், எங்கிருந்தோ ஒரு குரல்.

‘தராதீர்கள்’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது. பரிசு தரும் நிகழ்ச்சி பரபரப்புக்கிடையே பாதியில் நின்றது. காரணம்?

‘26 மைல் தூரத்தை அவன் ஓடி முடிக்கவில்லை. ஓடாமல் ஏமாற்றிவிட்டான்’ என்பதே அந்தக் குரல் கொடுத்த வாக்குமூலம். அப்படியா? எப்படி எல்லோரையும் ஏமாற்றமுடியும்? என்று கேட்டவர்கள் தங்களையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.