பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

விளையாட்டு உலகம்

உலக நாடுகளுக்கிடையே தொடங்கி, 1944ம் ஆண்டு வரை நீடித்தது. அதனால், பிளாங்கர்சின் நோக்கம் நிறைவேறாமலே போனதே தவிர, நிலைத்துப் போய் விடவில்லை.

இதற்கிடையிலே, பிளாங்கர்சுக்குத் திருமணம் நடைபெற்றது. கைபிடித்தக் கணவன் ஒரு டாக்டர். மனைவியின் மனம் அறிந்து, அவள் லட்சியத்திற்குத் துணை புரிந்து லட்சியக் கணவனாக வாழ்ந்தார்.

விளையாட்டுப் பயிற்சிகளுக்கிடையே வீட்டு வேலைகளும் தொடர்ந்தன. வளமான குடும்பத் தலைவியாக பரிணமித்த பிளாங்கர்ஸ் வாழ்க்கையிலும் பரிபூரணத்துவம் அடைந்தது போல, இரண்டு குழந்தைகளுககும் தாயானாள்.

இந்த இடைவெளி பன்னிரெண்டு ஆண்டுகளாக மாறியது. 1948ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெறப் போகின்றது என்ற செய்தியானது அவளுக்கு அமுதமாக ஒலித்தது. தொடர்ந்து இடைவிடாமல் பந்தயங்களுக்காகப் பயிற்சி செய்த பிளாங்கர்ஸ், துரிதமான பயிற்சியில் இறங்கிவிட்டாள். பிறகு, தன் கணவனோடும் குழந்தைகளோடும், லண்டன் மாநகரம் நோக்கிப் புறப்பட்டுவிட்டாள்.

ஏற்கனவே நீளத்தாண்டும் போட்டி, உயரத் தாண்டுப் போட்டி இவற்றில் உலக சாதனைகளைப் பொறித்திருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளை நீக்கிவிட்டு, வேறு பல நிகழ்ச்சிகளில் (Events) பங்கு பெற்று வென்று காட்ட வேண்டும் என்று விரும்பினாள். அவ்வாறே ஒட்டப் பந்தயங்களாக 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் இவற்றினைத் தேர்ந்தெடுத்தாள்.