பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

விளையாட்டு உலகம்

நான்கு தங்கப் பதக்கங்களுடன் வெற்றி மேடையில் நின்றதைக் கண்டு வம்பர்கள் வாயடைத்துப் போயினர். 20 வயதுக்குட்பட்ட கன்னியர்கள், பந்தயங்களில் இவளை விரட்டி ஓய்ந்ததைக் கண்டு, தாங்கள் கணித்த 'வெற்றி தோல்வி ஜோதிடம்' சுக்குநூறாகிப் போனதைக் கண்டு, மனம் மாறி, வீராங்கனையைப் புகழத் தொடங்கினர். அரிய சாதனையின் முன்னே தலை குனிந்தனர்: பணிவுடன் வணங்கினர்.

இதுவரை எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஆற்றல் மிகுந்த அற்புத சாதனையைச் செய்ததில்லை என்ற பெரும் புகழை அடைந்தாள். அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்வின் கிரேன்ஸிலின், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பாவோ நர்மி, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜெசி ஒவன்ஸ் எனும்மூன்றுசிறந்தவீரர்கள் போல முதல் பெண்மணியாக நின்றாள் பிளாங்கர்ஸ் கோயன்.

நாடே கூடியிருப்பது போல அவளைச் சுற்றிக் கூட்டம். தன் கணவன், குழந்தைகளுடன் குதிரைகள் பூட்டிய திறந்த வெளி சாரட்டில் பயணத்தைத் தொடங்கினாள்.

விராங்கனை பிரான்சினா பிளாங்கர்ஸ் கோயன் வாழ்க’ என்ற கூட்டத்தினரின் வாழ்த்தொலி விண்ணை முட்டியது.

‘வேகமாக ஓடியதைத் தவிர, வேறெதுவும் நான் செய்யவில்லையே’ என்றாள் அந்தத் தாய். எவ்வளவு தன்னடக்கம் பார்த்தீர்களா! வீரத்தில் பிறந்த விவேகம் அது.

60 கோடி மக்கள் அடங்கிய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்திற்கு 80 ஆண்டுகளுக்குமேலாக ஏங்கும்போது, ஒரு தாய் பெற்ற 4 தங்கப்பதக்கங்கள் என்ன கூறுகின்றன? தங்கப் பதக்கங்கள் வாங்க நீங்கள் தயாரா என்பதுதானே!