பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
10
 

1. இவரா என் தந்தை!

‘எப்பாடு பட்டாவது என் தந்தையை பார்த்தே தீருவேன்' என்று அந்த சிறுவன் வீரசபதம் பூண்டான். தன் தாயை மட்டுமே அவன் அறிவான். தந்தையோ வேறு தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தி தெரியும். தந்தையின் பெயர் தெரியும். ஆனால் முகம் மட்டும் தெரியாது என்ற நிலையில்தான் அவன் வாழ்ந்தான். ஏக்கமே நிழலாக வாழ்ந்தான்.

ஏனென்றால், அவன் தன்தாய் வயிற்றில் இருக்கும் பொழுதே தந்தை வேறு தேசத்திற்கு விரட்டப்பட்டார். வேறு நாடு சென்ற தந்தையை எப்படி சந்திப்பது? எவ்வாறு சந்திப்பது? அதற்கு யாரை துணைதேடுவது? அதற்குரிய பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று எண்ணி எண்ணி ஒருமுடிவுக்கு வந்தான் அந்த சிறுவன்.

சிறந்த விளையாட்டு வீரனாக மாறிவிட்டால், வெளி நாட்டுக்குப் போய் வர எளிதாக முடியும். செலவும் அதிகம் ஆகாது. மதிப்பும் மரியாதையும் கிடைப்பதுடன், மனதிலுள்ள ஆசையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தான்.

தனக்குப் பிடித்த விளையாட்டு ஒன்றை தேர்ந் தெடுத்தான். கைப்பந்தாட்டத்தினை பயில ஆரம்பித்தான். அல்லும் பகலும் அதே நினைவாக இருந்தான். நடந்தான். பயின்றான், முயன்றான். இறுதியில் அவன் முயற்சி வென்றது. கனவு பலித்தது. சீனாவின் கைப்பந்தாட்டக் குழுவில் ஒரு வீரனாக சேர்த்துக் கொள்ளப்பட்டான் அந்த வாலிபன்.

தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரத்தில் நடக்கப் போகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சீனாவின் பந்தாட்டக் குழு புறப்பட்டபோது, அவனது மனம் கடலலைபோல் முழங்கிக் கொண்டேயிருந்தது. அந்த முழக்கம் விரட்டியது. தாய்லாந்துக்கும் வந்தாகிவிட்டது.