பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
32
 

 அவர் இதற்குமுன் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே கிடையாதாம்.

160 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் ஓடிமுடித்த 67 வயதுக்காரரான வீரரின் பெயர் K.S. சாண்டு (K.S. Chandu) என்பதாகும். இந்திய நாட்டிலே இப்படியும் உடல் திறமும் உள்ள உரமும் உள்ள மக்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்; இந்தியாவில் நல்ல வீரர்கள் இல்லாமல் இல்லை.

இயற்கையே தந்த வளமான மலைப்பகுதிகளையும், வயல்வெளிகளையும், ஜீவநதிகளையும் வைத்துக் கொண்டு பஞ்சம், பசிக்கொடுமை, பற்றாக் குறை என்று பேசிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறோமே, அதேநிலையில் தான் நாமும் விளையாட்டுத்துறையில் இருக்கிறோம்!

விளையாட்டு என்பது பொழுதை வீணடிக்கக் கூடிய, பொருளை விரயமாக்கக்கூடிய காரியமல்ல, ஏதோ சிறிய பரிசைப் பெறுவதற்காகவும், அதேநேரத்தில் பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்யக்கூடிய செயலுமல்ல. சக்திமிக்க, திறம் மிகுந்த, மக்களை உருவாக்கி உழைக்கும் வல்லமையை அவர்களுக்குக் கற்பித்து ஒற்றுமை உணர்வை வளர்க்கக்கூடிய வகையிலே அனுபவங்களைத் தந்து, சந்தோஷம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பயிற்சி மேடைதான் விளையாட்டுக்களாகும்.

ஒரு நாட்டின் செல்வம் என்பது பணத்தாலும் பொருளாலும் வருவதல்ல. சக்திமிக்க மக்களால்தான் நாட்டின் செல்வம் என்பதை நம்மை ஆள்பவர்கள் உணர்ந்து கொண்டால், இந்தியா உலகநாடுகள் திலகமாகத் திகழுமே சக்திமிக்கவர்கள் இந்தியாவில் இல்லாமல் இல்லை அவர்களைப் பயன்படுத்துபவர்கள் தான் இல்லை. இல்லை இல்லை.