பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

48



போலந்து நாட்டு சிறந்த ஆட்டக்காரரான லுபான்ஸ்கி, டென்மார்க்குத் குழுவின் இலக்குக்கு அருகிலே பந்துடன் வந்துவிட்டார். மிக வேகமாக உதைத்தால் எளிதாகப் பந்து இலக்கிற்குள் சென்றுவிடும் என்ற வசதியான வாய்ப்பான நிலையில் அவர் இருந்தும், பந்தை உதைக்கவில்லை. பந்தும் இலக்கினுள் போகவில்லை, ஏன் அவர் அப்படியே நின்று விட்டார்?

டென்மார்க்குக் குழுவின் இலக்குக் காவலர் தடுமாறிக் கீழே விழுந்து கிடக்கிறார். பந்தை உதைத்தால் அவருக்குக் காயம் ஏற்படும். அதனால் ஆபத்து நேரிடும் என்று பயந்து ஒதுங்கி நின்றார். தன் குழு வெற்றி வாய்ப்பினை அந்த சமயத்தில் இழந்தாலும், எதிர்க்குழு ஆட்டக்காரர் ஆபத்து இன்றிதப்பித்துக் கொண்டாரே! அதில் அவருக்கு சந்தோஷம்.

எதிர்த்து விளையாடுபவர்களை எப்படியாவது கீழே இடறிவிட்டு, தள்ளிச் சாய்த்து மிதித்து துவைத்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற நினைவுடனே காலம் பார்த்து விளையாடும் ஆட்டக்காரர்கள் மத்தியிலே, எதிர் ஆட்டக்காரரும் நமது சகோதரரே; அவரும் நம்மைப் போல்தானே. எந்த விபத்தும் யாருக்கும் நேரக்கூடாது என்று பெருந்தன்மையான நினைவுடன் பண்பாளராக நடந்துகொண்ட லுபான்ஸ்கிக்கு பண்பாளர் பரிசினை அளித்து யுனெஸ்கோ பாராட்டியது.

அதுபோலவே இன்னொரு போலந்து ஓட்டக்காரரும் இந்த பரிசினைப் பெற்றிருக்கிறார். அவர் பெயர் ரிசார்டு போட்லாஸ் என்பதாகும். (Rhszard Podlas.) இந்த சிறந்த ஓட்டக்காரர் உலகக் கோப்பைக்கான ஓட்டப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி முதல் பரிசு பெற்றவராவார். அவர் ஐரோப்பிய நாடுகளின் சார்பாக ஒட்டத்தில் பங்கு பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றார்.