பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



57

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


22. பரிசும் பாராட்டும் சும்மா வருமா!

ஸ்வீடன் தேசத்திலே ஒரு போட்டி நடத்துகின்றார்கள். அந்தப் போட்டியில் வெற்றிபெறும் வீரனுக்கு ஸ்வீடன் வீரன் அதாவது ஸ்வீடன் நாட்டு வீரமகன் எனும் புகழுக்குரியபட்டம் (Swedish Classic) ஒன்றையும் தருகின்றனர்.

அந்தப்பட்டம் பெறுவதற்குரிய போட்டிகள் என்னென்ன? என்று அறிந்தால் இந்த நான்கு போட்டிகளில் எப்படித்தான் கலந்து கொள்ளமுடியும் என்றுதான் திகைக்கத் தோன்றுகிறது.

நடத்தப் பெறுவது நான்கு போட்டிகள்.

3 கிலோமீட்டர் நீச்சல் போட்டி.

30 கிலோ மீட்டர் தூரம் நெடுந்தூர ஓட்டப் போட்டி.

85 கிலோ மீட்டர் தூரம் சறுக்குக் கட்டை மீது பனித்தரையில் செல்லல்.

300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் போட்டி.

போட்டியிடுகின்றவர் அனைவரையும் ஒருசேர போட்டியிடச் செய்து, அவர்களிலே முதலாவதாக வருகின்ற வீரர்களுக்கு பட்டமும் பரிசும் தருகின்றனர். நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!

நல்ல உடல் வலிமையும், நிறைய நெஞ்சுரம், (Stamina), வளமான பயிற்சியும், முடியும் என்ற தன்னம்பிக்கையும், உடையவர்களே இதில் பங்கு பெற்று போட்டியிடமுடியும்! முதலாவதாக வருகின்றவர் உண்மையிலேயே திறமைசாலிதான்! நாட்டின் தலையாய வீரன் என்ற பெயர் சும்மா வருமா என்ன?