பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.65
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

26. பார்வையாளர்களுக்குப் பயம்!

கிரிக்கெட் ஆட்டம் ஆடுவதற்கான மைதானத்தின் எல்லை எப்பொழுது வந்தது தெரியவில்லை. என்றாலும், 1884ம் ஆண்டு வெளியான விதிமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற ஒரு குறிப்பு மட்டும் தெளிவாகத் தெரிவிக்கிறது.

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1774ம் ஆண்டு காலத்தில், பந்தாடும் தரையையே (Pitch) எந்த இடத்தில் வைத்துக்கொண்டு ஆடுவது என்பதே தீர்மானிக்கப் படாமல்தான் இருந்து வந்திருக்கிறது.

உள்ளூர் குழுவிற்கும் ( Home Team) (வெளியூர் குழுவிற்கும் (Visiting Team ) போட்டி நடைபெறுகிறபொழுது, உள்ளுர் குழு எந்த இடத்தில் ஆடலாம் என்று பந்தடித்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் இடத்திலிருந்து, முப்பது கெஜத்திற்குள்ளாக எங்கேயேனும் ஒரு இடத்தை ஆடுவதற்காகத் தேர்ந்தெடுக்க உரிமையிருந்தது என்ற ஒரு விதியை நாம் காணும் பொழுது ஆச்சரியப் படுகின்றோம்.

அந்த விதியானது 1810ம் ஆண்டு ஒரு புதிய மாற்றம் பெற்றுக் கொண்டது. அதாவது, இரண்டு குழுவினர் சேர்ந்து மனம்ஒத்து, பந்தடித்தாடும் தரையைத் (Pitch) தேர்ந்தெடுத்து விட்டாலும், இரண்டு நடுவர்களும் அதை ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை. இல்லையென்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து 30 கெஜத்திற்குள்ளாக ஓர் ஆடும் இடத்தைத் தேர்ந்தெடுக்க நடுவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது.

அதே விதிமுறை, மேலும் புதிய அதிகாரத்தை நடுவர்களுக்கு 1824ம் ஆண்டு வழங்கியது. நடுவர்களே பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமைதான் அது.