பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் என்னும் தலைப்பே, நூலைப்பற்றி தெளிவாக விளக்கியிருக்கும் என்பதை நான் அறிவேன்.

இருந்தாலும், விளையாட்டு என்பதுமுரட்டுத்தனத்தையும் முட்டாள் தனத்தையும் முழு மூச்சாக வளர்த்துவிடும் காரியம் என்று கருதிக்கொண்டு, கரைந்து, கனைத்து, கதறிக் கொண்டு வாழ்பவர்களுக்கு விளையாட்டு என்பது அருமையான செயல், அற்புதமான நடவடிக்கை, ஆனந்தமான காரியம், என்பதை விளக்குவதற்காகவே மேலும் இந்நூல்பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

விளையாட்டுக்களில் பங்கு பெற்றவர்கள், கலந்து கொண்டு காலம் கழித்தவர்கள், பார்த்துப் பரவசம் அடைந்தவர்களில் பலரை இந்நூலில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

அவர்கள் தங்களுக்குள்ளேயே தகுதி பெற்றவர்களாக மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் மனிதாபிமானத்துடன் வாழ வழிகாட்டி, மாறாத புகழ்பெற்று, மணிமகுடம் போல சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றார்கள் என்பதைக் காட்டவே இவ்வாறு சுவையான சம்பவங்களை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

விளையாட்டானது வாழ்க்கையை சுவையுடன் வாழ வழிகாட்டி இருக்கிறது; பத்திரமாக வாழ பாதுகாப்புத் தந்திருக்கிறது; பண்புடன் வாழ உதவியிருக்கிறது; முன்னேற்றம் பெற உற்சாகம் ஊட்டி இருக்கிறது; தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று எச்சரித்திருக்கிறது என்பன போன்ற கருத்துக்களுக்கு, நிதர்சனமான சான்றுகளாகவே பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

அத்தனையும் உண்மை சம்பவங்கள். உலகின் பல பாகங்களில் வாழ்ந்து சென்ற, வாழ்கின்ற வீரர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் தான்.

படிக்கும் பொழுது சுவையான இருப்பதற்காக மட்டும் அல்ல, படித்த பிறகும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பெருமை பெற வேண்டும் வாசகர்கள் என்ற ஆர்வத்தில் தான் இந்நூலை எழுதியிருக்கிறேன்.

தொடர்ந்து என் நூல்களை ஆதரித்து வரும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும், அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா