பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.69
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


அது விக்கெட்டின் முன்னே கால் இருந்ததாகத் தான் (L.B.W.) அர்த்தம். அதைப்பற்றி நடுவரிடம் யாராவது முறையிட்டுக் கேட்டிருக்கலாம். யாரும் முறையிடவில்லை என்றதால், நடுவரும் முடிவு தரவில்லை. அன்றைய ஆட்டம் அப்படியே முடிந்தது.

அன்றைய மாலைப்பொழுதில், பந்தடித்து ஆடிய ஆட்டக்காரர் கிரேஸிடம் வந்து, நல்லவேளை! என்கால் மெத்தையில் பட்ட பந்துபற்றி யாரும் முறையிடவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் நான் ஆட்டம் இழந்து போயிருப்பேன்! என்று உரைத்துவிட்டு, அல்ல அல்ல, உளறிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் காலையில் ஆட்டம் தொடங்கியது. முதல்பந்து எறிவதற்கு முன்னே, கிரேஸ் ஒரே கத்தாகக் கத்தினார். அது என்ன? (How is That) என்றுதான்.

முதல்நாள் மாலையில் கடைசி பந்து எறிந்ததற்கு மறுநாள் காலையில் முறையிடுகின்றார். அது என்ன என்று! நடுவரும் 'ஆமாம்! அது விக்கெட் முன்னே கால்தான்' (L.B.W.) என்பதாகக் கூறி, அந்த ஆட்டக்காரரை அவுட்டாகி விடுகின்றார்.

தவளை தன்வாயால் கெடும் என்பார்கள். அந்த ஆட்டக்காரரும் தன்வாயால்கெட்டார். ஆட்டம் இழந்துபோனார்.

காலம் கடந்து போனாலும், கிரேஸ் கேட்டார். நல்ல முடிவே கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியும் ஒரே ஒரு முறைதான் நடந்தது. அதற்குப் பிறகு விதி ஒன்று புதிதாகப் புகுத்தப்பட்டது. எதையும் அப்பொழுதே கேட்கவேண்டும் என்பதுதான். அதாவது அடுத்த பந்து எறியப்படுவதற்கு முன்பு.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா! வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்களே! கிரேஸ் இப்படி கேட்டதால், சரித்திரத்தில் சாகாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறாரே!