பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
76
 

இரண்டு வீரர்களும் உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு போட்டியிட்டிருக் கின்றனர். என்றாலும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து, கொண்டு தங்கள் வெற்றியை மீண்டும் நிலைநிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியுடன் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திற்கு வந்திருந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளில் வீரர்கள் அணிவகுப்பு நடைபெறும். அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியுடன், வீரர்களுடன் அணிவகுப்பில் நடந்து சென்று வருவது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும்.

மறுநாள் தனது போட்டி நடைபெறவிருந்ததால், அணிவகுப்பில் கலந்து கொள்வதில்லை என்று லார்டு பர்கிலி முடிவு செய்திருந்தான். திட்டப்படி தான் போய்விடக்கூடும் என்பதால்தான் இந்த முடிவு. ஆனால், அமெரிக்க வீரனான மோர்கன் டெயிலர் தனது நாட்டுக் கொடியைப் பிடித்துச் செல்ல வேண்டியிருந்ததால், அணிவகுப்பில் கலந்து கொள்கிறான் என்று சேதியை அறிந்த லார்டு, தன் முடிவை உடனே மாற்றிக் கொண்டான்.

'தனது முதல் எதிரியான மோர்கன், கால் அயர நடந்து களைத்து போகட்டும். நாம் ஓய்வு எடுத்துக் கொண்டு, மறுநாளில் எளிதாக வெற்றிபெற்று விடுவோம்' என்று லார்டின் வீரநெஞ்சம் திட்டம் போடவில்லை.

'அவன் அணிவகுப்பில் கலந்து கொள்கிறான். நானும் கலந்து கொள்வேன்' என்று லார்டு முடிவெடுத்தான். அவ்வாறு தன் முடிவின்படியே நடந்தான். அந்த அணிவகுப்பு நிகழ்ச்சியும் அற்புதமாக நடந்து முடிவு பெற்றது.

மறுநாள் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றது யார் என்றால் இருவருமே இல்லை.