பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.83 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

33. எப்படித்தான் ஜெயிக்கிறார்களோ!

உலக அரங்கிலும் சரி, ஒலிம்பிக் போட்டிகளிலும் சரி, நீச்சல் போட்டிகள் என்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்களே அற்புத சாதனைகளை நிகழ்த்தி, அரிய தங்கப்பதக்கங்களை வென்று தங்கள் தாயகத்திற்குத் திரட்டிக்கொண்டுசென்ற காலம் ஒன்று இருந்தது . ஆனால், அந்த நிலை இப்பொழுது இல்லை. கிழக்கு ஜெர்மானிய வீரர்களும் வீராங்கனைகளுமே இப்பொழுது சிறந்த சாதனை புரிபவர்களாக விளங்குகிறார்கள்.

பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்கள் தான் ஒலிம்பிக் பந்தயத்தில் உண்டு என்றால், அவற்றில் 11 தங்கப்பதக்கங்களை வென்று விடுகின்ற வீராங்கனைகளாக அவர்கள் விளங்குகிறர்கள். இப்படியாக மொத்தம் 36 பதக்கங்களில் 6 போட்டிகளில் வென்று 26 பதக்கங்களைப் பெற்று பெருமையை சேர்த்துத் தந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு நீச்சல் பயிற்சியாளராக இருந்து நிறைய வெற்றிகளை ஈட்டித் தந்த பில்ஸ்வீட்மேன் (Bill Sweetmen) என்பவர் வெற்றி பெற்ற வீராங்கனைகளைக் கண்டார். அவர்களின் அளப்பரிய ஆற்றலை நேரில் பார்த்த பிறகு, அவரால் அவரையே நம்ப முடியவில்லை. அவரும் ஒரு பயிற்சியாளர்தானே! அவர்களால் எப்படித்தான் ஜெயிக்க முடிகிறது என்று யோசனை செய்ய ஆரம்பித்தார்.

நம்மவர்கள் என்றால் அவர்களைப் பார்த்து பல சந்தேகங்களைக் கிளப்பி விடுவார்கள். நமக்கு அப்படி பல சந்தர்ப்பங்கள் இல்லை என்பார்கள். வசதிகள் போதாது. வாழ்க்கை அமைப்பே சரி இல்லை என்று சமுதாயத்தின் மீது பழிசுமத்துவர். தங்களை மட்டும் சாமர்த்தியசாலி என்று கதை கட்டிவிட்டு, பெருமை தேடிக்கொள்வார்கள்.