பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 38. வீரம் இருந்தாலும் விவேகம் வேண்டுமா!

வாழ்க்கையை வளமாக நடத்திச் செல்வதற்கு உதவுவன விளையாட்டில்பெறும் அனுபவங்களே ஆகும். மகிழ்ச்சிக்காக மட்டும் விளையாடுவது அல்ல. மனநிறைவுக்காகவும், உடல் வலிமைக்காகவும்தான் நாம் விளையாடுகிறோம். ஆனந்தமான விளையாட்டு நேரத்தில் ஆபத்தான விளைவுகளும் எப்பொழுதாவது நேர்வதுண்டு.

ஆபத்து நேராமல் விளையாடுவது அறிவுடையோர்க்கு அழகு. ஆத்திரப்பட்டு விளையாடும் பொழுது அறிவு தடுமாறுகிறது. விதியை மீற நேர்கிறது. வரம்பு மீறும்பொழுது, வருவதெல்லாம் ஆபத்தாகத்தான் முடியும். ஆகவே விழிப்புடனே, நிதானமாகவே விளையாட வேண்டும்.

எதிர்பார்க்காத நேரத்தில் எதுவும் நடப்பதுதான் வாழ்க்கையாகும். சொல்லி எதிர்பார்த்து நடப்பது நிகழ்ச்சி (Incident). சொல்லாமல் எதிர்பாராமல் நடப்பது விபத்து (Accident). எதிர்பாராமல் வருவதை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் விளையாடுவதுதான் பண்புள்ளவர். அறிவுள்ளவர் செயலாகும். அப்படி நடந்து கொள்வதுதான் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

சிறந்த வீரர்தான், பிறர் போற்றும் திறமையும் ஆற்றலும் மிக்கவர்தான். இருந்தாலும் இந்த வீரத்திற்கு ஏற்ப, விவேகம் இல்லாததால், எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத இன்னுயிரை இழக்க நேர்ந்தது என்ற ஒரு சம்பவம், சரித்திரத்தில் ஒரு சோக சம்பவம்தான்.

G. சம்மர்ஸ் என்றொரு கிரிக்கெட் ஆட்டக்காரர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம்ஷயர் எனும் பகுதியைச்சேர்ந்தவர். முதல்தர ஆட்டக்காரர். கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ஆர்வமும் நீங்கா வேகமும் கொண்டவர்.