பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
30

அந்த மனப் பக்குவத்திலே நின்று நீங்காத கடமை உணர்வு. கடமையுடன் கலந்துறவாடும் உரிமை வேட்கை, உரிமையிலே முகிழ்த்தெழும் தன்னம்பிக்கை தன்னம்பிக்கையினால் தலை தூக்கித் தவழ்ந்தாடும் தைரியம். தைரியம் விளைத்து விடும் திறமையும் நுணுக்கங்களும் எல்லாம், விளையாடும் மைதானத்திலே ஒவ்வொருவருடனும் விளையாடுகின்றனவே! துதிபாடுகின்றனவே!

இவ்வாறு பண்புகளை விதைத்துக் கொண்டே பரந்த ஆடுகளத்தில் விளையாடும் பொழுது, இன்பம் மட்டுமா கிடைக்கிறது? யாராக இருந்தாலும் திறமையுள்ளவர்களாக இருந்தால், தலைவணங்கி வரவேற்கின்ற உயர்ந்த பண்பும்; திடீரென்று நிகழ்கின்ற சோதனைகளுக்கெல்லாம் - பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண விழைந்து விரைந்து செயல்படும் மூளை; மூளையின் விரைவுக்கேற்ப செயல்படும் உடல் உறுப்புக்கள்; எதிரிகளின் நோக்கத்தினைப் புரிந்து கொண்டு, அவர்கள் இயக்கத்தை, முன்னேற்றத்தைத் தடுக்கின்ற சமயோசிதப் புத்திக் கூர்மை; சந்தர்ப்பத்திற்கேற்ப நடந்து கொண்டு சமாளிக்கும் சாகச வேலைகள் அத்தனையும் விளையாடும்பொழுது தானே கிடைக்கின்றன.

பண்புகள் மட்டும் தான் தலைதூக்குகின்றனவா என்றால், தெம்புந்தான். வியர்வையைப் பெருக்கிவிட்டு வழித்து விட்டு, நிர்மலமாக விளங்கும் தூய உடல். அதிக சுவாசமும், அதிக உயிர்க் காற்றும் பெற்று நிறைத்துக் கொண்ட நுரையீரலின் நிம்மதிப் பெருமூச்சு. இப்படியே எப்பொழுதும் இருந்தால், இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுவேன், ஓடிப் பணி புரிவேன்' என்று ஓடும் இரத்த ஓட்டம். அதனை இறைத்து இதமாக இயங்கும் இதயத்தின் ஆட்டம். "கலங்காதீர்'