பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


நீங்கள் நினைக்கின்றீர்கள்! அதுதான் இல்லை. முதல் பரிசு பெறும் வீரனுக்குப் பரிசாகத் தன்னையே தருவதற்காகத்தான்.

குழப்பமாக இருக்கிறதா உங்களுக்கு அந்த நாட்டின் நியதி அது. வெற்றி பெறும் வீரன் அரசியினை மணக்கின்ற தகுதியைப் பெறுகின். ஆயுள் முழுவதும் அளவோடு வாழ வேண்டுமா என்றால் அதுவும் இல்லை. அதற்கும் ஒரு கால வரம்பு உண்டு. 50 முழு நிலவு காணும் வரைதான் அவன் "தேனிலவை" அனுபவிக்கலாம். அதாவது 4 ஆண்டுகளே அந்த வீரன், அரசியின் அந்தப்புர நாயகனாக வாழ முடியும்!

அப்புறம் என்ன நடக்கும்? நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முன்போலவே விளையாட்டுப் பந்தயங்கள் நடக்கும். இந்தப் பந்தயங்களில் போட்டியிட, தற்காலிக மன்னனுக்கும் வாய்ப்புண்டு. மன்னன் முன் போல அத்தனைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் ராணியை தன் மனைவியாகப் பெறலாம். போட்டியில் தோற்றால், கிடைக்கும் பரிசோ கொடிய மரண தண்டனைதான்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, புதிய வீரன் புத்துணர்ச்சியோடும், பூரித்த இன்பக் கிளர்ச்சியோடும் அரசியின் நாயகனாக மாற, மாஜி மன்னன் மரண தண்டனையை பெறுகிறான். அதாவது, அவன் பலிபீடத்தில் சிரம் வெட்டப்பட்டு இறக்கலாம். அல்லது மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடப்பட்டு மரணத்தைத் தழுவலாம். இரண்டில் ஒரு தண்டனையை இறக்கப் போகிறவன் தானே தேர்தெடுத்துக் கொள்ள வேண்டும்.