பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

வாழ்க்கை என்ற வளமான முகத்திற்கு எழிலான கண்கள் போன்றவை உழைப்பும் முனைப்பும். முனைப்பு என்பது நோக்கம். கொண்ட நோக்கத்திலேயே முனைந்து நிற்றல். உழைப்பு என்பது கொண்ட கொள்கைக்கு ஏற்ப சலிக்காது செயல்படுதல்.

ஒட்டப் பந்தயத்தில் நிச்சயம் முனைப்பு உண்டு. அதுதான் முதலாவதாக வருதல், வெற்றி பெறுதல் என்பது. அத்தகைய அரிய முனைப்புக்கு உழைப்பே ஆன்ற துணையாகும்.

அவ்வாறு உழைப்பில் ஈடுபடும் போ துதான், தம்மையறியாமலே, மேலே கூறிய அரிய பண்புகளை எல்லாம், மனத்துக்குள்ளே விளைத்துக்கொள்கின்றனர் அவ்விளைஞர்கள். காலம் செல்லச் செல்ல, அவைகளே கற்பகத் தருவாக வளர்ந்து, கனிவோடு கனிந்து சுவை தரும் பழங்களைச் சுமந்து நிற்கின்றன.

வீட்டிற்கு நல்ல மகனாக விளங்க வேண்டும். நாட்டிற்கு நல்ல குடிமகனாகத் துலங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தம் மக்கள்மீது தணியாத ஆசை கொண்டிருப்பது குன்றிலிட்ட விளக்காகவேதான் ஒளிருகின்றது.

அத்தகைய அரிய ஆசைக்கு வடிகாலாக, விடி வெள்ளியாகத் திகழ்வது ஓட்டப் பந்தயங்களே! தங்கள் பிள்ளைகளைப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்து 'ஒடுங்கள் பார்க்கலாம் என்று பெற்றோர்கள் ஊக்குவித்து கலந்து கொள்ளச் செய்தால், நிச்சயம் நாம் மேலே கூறிய பலன்களைப் பார்க்கலாம். வாழ்க்கையில் இன்பச் சூழ்நிலையை சேர்க்கலாம்.