பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

ஆற்றல், வலிமை, திறமை,மேற்கூறிய அத்தனைத் திறமை களையும் உடலுக்குத் தந்து, உடலுக்கு வளர்ச்சியும் ஈந்து, உள்ளத்திற்கு உணர்ச்சியும் எழுச்சியும் இப்போட்டி நிகழ்ச்சிகள் தருவதால்தான் உடலாண்மை நிகழ்ச்சிகள் என்று இவற்றைக் கூறுகின்றோம்.

உடலாண்மை நிகழ்ச்சிகளில் உவப்புடன் வந்து பங்கேற்கும் வீரர்களை உடலாளர்’ என்றே அழைப்போம். ஏனெனில், உடலை அந்த வீரர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆள்கிறார். பேச்சை ஆள்பவரை பேச்சாளர் என்கிறோம். வாக்கை ஆள்பவரை வாக்காளர் என்கிறோம். அது போலவே, உடலை அற்புதமாகக் கட்டுப்படுத்தி, தன் வயப்படுத்தி, தன் ஆளுகைக்கு உட்படுத்தி, செயற்கரிய அரும்பெரும் செயல்களைச் செய்வதால் தான், ஒட்டப் பந்தயத்திலும், தாண்டும் அல்லது எறியும் போட்டிகளிலும் பங்கு பெறுகின்ற வலிமை மிக்க வீரர்களையெல்லாம் உடலாளர்’ (Athlete) என்று அழைக்கிறோம்.

உடலியற் கல்வித் துறையிலே அடலேறு போல் விளங்குவது உடலாண்மை நிகழ்ச்சிகளே. அதுவும், இளைஞர்கள் இதய பீடத்திலே எழிலுடனும் ஏற்ற முடனும் ஆட்சி செய்வது இந்த நிகழ்ச்சிகளே. இளமையின் சக்திக்கு ஈடுகொடுப்பது தனி மனிதன் திறமைக்கு வாய்ப்பளிப்பது துணிவான வாழ்க் கைக்குத் துணை நிற்பது; கனிவான புகழுக்குக் கைகொடுத்துக் காப்பது வீரத்திற்கும் விவேகத்திற்கும் விருந்தளிப்பது உடலாண்மை நிகழ்ச்சிகளே.