பக்கம்:விளையும் பயிர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழந்தை காந்தி

போனால் கெட்ட பழக்கங்கள் வந்துவிடுமென்ற பயம் அவளுக்கு. மதுபானம், மாமிச உணவு, ஒழுக்கப் பிசகு எல்லாம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தால், சீமைக்குப் போகவேண்டாம் என்று சொன்னாள். ஆனால் உறவினர்கள் வற்புறுத்தினார்கள். காந்திக்கும் ஆசையாக இருந்தது. கடைசியில், "மதுவைத் தொடமாட்டேன்; மாமிசம் உண்ணுவதில்லை; கெட்ட நடத்தையில் ஈடுபடமாட்டேன்” என்று தாய்க்குச் சத்தியம் செய்துகொடுத்தார் காந்தி. அதன் பிறகு சீமைக்குப் போக உத்தரவு கொடுத்தாள் தாய்.

சீமைக்குப் போய்ப் படித்தார் காந்தி. தாயிடம் சத்தியம் செய்தபடி நடந்துகொண்டார். அது தவறும்படியான சந்தர்ப்பங்கள் வந்தன. ஆனாலும் காந்தி அப்போதும் மனம் தளராமல் சத்தியத்தைக் காப்பாற்றினார். லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்தார். இந்தியாவுக்கு வந்து சில காலம் பாரிஸ்டராக இருந்தார். பிறகு தென் ஆப்ரிக்கா சென்று பாரிஸ்டராக இருந்தார். அங்கே இந்தியர்கள் படும் துன்பத்தைப் போக்கப் போராடினார். அப்போதுதான் காந்தியின் உண்மையான பெருமை தெரிந்தது. தென் ஆப்ரிக்காவில் அவர் செய்த காரியங்களும், பிறகு இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் அடிமை வாழ்வைப் போக்கச் செய்த காரியங்களும் பாரதம், ராமாயணம் போலப் பெரிய பெரிய கதையாகச் சொல்ல வேண்டியவை.

இன்று பாரத நாடு சுதந்தர நாடாக இருப்பது காந்தி மகாத்மாவினால்தான். அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் பெருமை அடைகிறோம். 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி ஒரு வெறியனுடைய துப்பாக்கிக்கு அவர் இரையானார். மரணத்துக்கு அஞ்சாமல் வாழ்ந்தவர் அவர். அவர் வாழ்ந்த நாட்டில் வாழ நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். அதைக் காட்டிலும் பெரிய சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.


13