பக்கம்:விளையும் பயிர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


டாக்டர் சொன்னார், "நல்ல வேளை! தங்கையாகப் பிறந்தாள். தம்பியாகப் பிறந்தால் உன் சொத்தில் பங்கு கேட்பான்" என்று அவர் வேடிக்கையாகச் சொன்னார். ஜவாஹர்லாலுக்கு அது வேடிக்கையாகப்படவில்லை. "அதென்ன அப்படிச் சொல்லுகிறார்? என் பொருள்களைத் தம்பிக்குக் கொடுக்க மனசு இல்லாதவனா நான்?" என்று எண்ணி வருத்தப்பட்டார். டாக்டர்மேல் கோபம் கோபமாக வந்தது. உண்மையில் ஜவாஹரைப்போல ஏழைகளுக்கு இரங்கும் பெரியவர்கள் மிகவும் குறைவு. பெரிய அரண்மனையாக விளங்கிய ஆனந்த பவனத்தைப் பிற்காலத்தில் அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து காங்கிரஸ்-க்குக் கொடுத்துவிட்டார்கள். "சுயராஜ்ய பவனம்” என்று அதற்குப் புதிய பேர் உண்டாயிற்று.

தம் குமாரர் ஜவாஹர்லால் நேருவுக்கு ஒரு வெள்ளைக்காரரைக் கொண்டு பாடம் சொல்லிவைத்தார் தகப்பனார். புரூக்ஸ் என்பது அவர் பெயர். அவரிடம் ஜவாஹர் நன்றாகக் கல்வி கற்றார், பிறகு அவரை அவருடைய தகப்பனார் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசித்தார் ஜவாஹர். காலேஜ் படிப்புப் படித்துப் பிறகு வக்கீல் படிப்பும் படித்தார்.

அந்தக் காலம் முதலே இந்தியாவுக்குச் சுதந்தரம் வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. இந்தியா சுதந்தரம் பெற வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்தது. படிப்பையெல்லாம் முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். மகாத்மா காந்தியிடம் அன்பு பூண்டார். அவருடைய பிள்ளையைப்போலப் பழகினார். தேசத்துக்காகத் தொண்டு புரிந்து பல வருஷங்கள் சிறைக்குச் சென்றார்.

இந்தியா சுதந்தரம் அடைந்துவிட்டது. மகாத்மா காந்தி இப்போது இல்லை. ஆனாலும் ஜவாஹர்லால் நேரு இருக்கிறார் என்ற தைரியம் நமக்கு இருக்கிறது. குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்கும் அவருக்கு எவ்வளவோ வேலை. ஆனாலும் தம் இரண்டு பேரர்களுடன் விளையாடுவதில் அவருக்கு ஆனந்தம். அவர் சொற்படி நாமெல்லாம் செய்தால்தான் நமக்கும் அவரிடத்தில் பிரியம் இருப்பது உண்மையாகும்.


18