பக்கம்:விளையும் பயிர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா


தமிழ்த்தாத்தாவுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர்களுடைய ஊர் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம். தமிழ்த் தாத்தாவுக்குப் பிற்காலத்தில் எத்தனையோ பட்டங்கள் கிடைத்தன. திருவாவடுதுறை என்ற ஊரில் உள்ள சைவமடத்தின் தலைவர் மகாவித்வான் என்று ஒரு பட்டம் அளித்திருக்கிறார் அரசாங்கத்தார். மகாமகோபாத்தியாயர் என்ற பட்டம் அளித் தார்கள். சென்னை யூனிவர்ஸிட்டியில் டாக்டர் என்ற பட்டம் கிடைத்தது. இன்னும் திராவிட வித்தியாபூஷணம், தாட்சிணாத்திய கலாநிதி என்றெல்லாம் வேறு பட்டங்களும் கிடைத்தன.

இவைகளெல்லாம் இருக்கட்டும். மற்றொரு பட்டம் அவருக்குக் கிடைத்தது. அந்தப் பட்டம் என்ன தெரியுமா? "கத்திரிக்காய்த் தொகையல்!" அவருக்கு ஒரு தாத்தா இருந்தார் என்றேனே, அந்தத் தாத்தாவால் வந்த பட்டம் அது.

ஆறு வயசுக் குழந்தையாக இருந்தார் சாமிநாதையர். அவர் தகப்பனார் வெளியூருக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய தாயார் இருந்தார். அவர் தாத்தாவாகிய கிழவருக்குச் சாப்பாட்டில் அதிகப் பிரியம். "ஒருவரும் நான் சொல்கிறபடி நடக்கிறதில்லை" என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்குப் பிரியமான சமையலைச் செய்யவேண்டுமென்று சாமிநாதையருடைய தாயார் எண்ணுவார். தம் குமாரரைக் கூப்பிட்டு, “உன் தாத்தாவிடம் போய் என்ன சமையல் பண்ணவேண்டுமென்று கேட்டுக் கொண்டுவா" என்று சொல்லி அனுப்புவார். குழந்தை சாமிநாதையர் தாத்தாவிடம் போவார்: "என்ன சமையல் செய்ய வேண்டும்?" என்று கேட்பார்.

தாத்தா உடனே பதில் சொல்ல மாட்டார்; கனைத்துக்கொள்வார். மேலும் கீழும் பார்ப்பார்; "சமையலா?" என்பார். சிறிது நேரம் கழித்து, "மண்ணாங்கட்டி, தெருப்புழுதி" என்று வெறுப்பாகச் சொல்வார்.

அதைக் கேட்ட பேரர் உடனே அம்மாவிடம் ஓடுவார். "மண்ணாங்கட்டி, தெருப்புழுதி", என்று சொல்வார்.

"என்னடா இது? சமையல் என்ன செய்கிறதென்று கேட்டால், எதையோ உளறுகிறாயே!"என்று தாயார் கேட்டார்.


21