பக்கம்:விளையும் பயிர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


சந்தோஷம் அடைந்தது. அவற்றைப் பார்த்துச் சொன்ன சாமிநாதையரிடத்திலும் அன்பு உண்டாயிற்று. அத்தகைய சமயத்தில் சாமிநாதையர், "நேரிலே பாடம் கேட்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது" என்று ஆசிரியரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படியே பாடம் சொல்லத் தொடங்கினார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குக் கவி பாடுவதென்றால் தண்ணீர் பட்ட பாடு. அன்பர்களுடன் பேசிக்கொண்டே கவிகளையும் சொல்வார். சொல்லச் சொல்லச் சாமிநாதையர் ஏட்டில் எழுதிக் கொள்வார். இப்படிப் பல புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்,

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொன்னார். அந்தக் காலத்தில் இருந்த எல்லா நூல்களையும் நன்றாகப் பாடம் சொல்லுவார். ஆனால் அவருக்குக்கூடத் தெரியாத புத்தகங்களை நாம் இப்போது படிக்கிறோம். அதற்குச் சாமிநாதையரே காரணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த புலவர்கள் பாடிய நூல்கள் அந்தக் காலத்தில் எங்கோ கிடந்தன. கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்தபோது சாமிநாதையர் அந்த நூல்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். ஊர் ஊராகச் சென்று ஏட்டுச் சுவடிகளைத் தேடினார். ஏட்டுச் சுவடிகளில் உள்ளதைப் படிப்பது மிகவும் கஷ்டம். எழுதினவர்கள் செய்த தப்புகளெல்லாம் அவற்றில் இருக்கும். நூல்களோ மிகப் பழங்காலத்து நூல்கள். இப்படி இருந்தும் ஏட்டுச்சுவடிகளைப் படித்து, பழைய பாடல்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டார் தமிழ்த்தாத்தா, பிறகு அவற்றை அழகாக அச்சிட்டார்.

தமிழ் படித்துக் கரையேற வேண்டுமானால் அவர் பதிப்பித்த நூல்களைப் படிக்காமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அவர் அளித்த நூல்களைப் படிக்க வேண்டும்.

நீங்கள் இன்னும் சில வருஷங்கள் ஆனபிறகு அவர் வெளியிட்ட நூல்களைப் படிக்கத்தான் போகிறீர்கள். அப்போது அவருடைய பெருமை உங்களுக்கு நன்றாகத் தெரியவரும்.


24