பக்கம்:விளையும் பயிர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


யப்பட்டார்கள். "என் பெயர் இருக்கத்தான் வேண்டும்” என்று தைரியமாகச் சொன்னார் ராஜேந்திரர்.

பிரின்ஸிபால் கோபத்துடன், "நீ அடக்கமில்லாதவனாக இருக்கிறாய்" என்றார்.

"இல்லை; நான் நன்றாகப் பரீட்சை எழுதியிருக்கிறேன். என் பெயர் இல்லாமல் எப்படி இருக்கும்?"

"சண்டியாக இருக்கிறாயே; வாயாடுவதால் உனக்கு ஐந்து ரூபாய் அபராதம்" என்றார் பிரின்ஸிபால்.

மாணாக்கர் விடவில்லை. "இல்லை; நன்றாகப் பாருங்கள். என் பெயர் இல்லாமல் போக நியாயம் இல்லை" அழுத்தமாகச் சொன்னார்.

"என்னை எதிர்த்துப் பேசுகிறாய், பத்து ரூபாய் அபராதம்."

"ஸார், ஸார். நன்றாகப் பாருங்கள். நான் நிச்சயமாகச் செலக்ஷடனில் தேறியிருப்பேன்".

பிரின்ஸிபால் பின்னும் கோபம் அடைந்தார். "பதினைந்து ரூபாய்", "இருபது ரூபாய்", "இருபத்தைந்து ரூபாய்" என்று அபராதத்தை ஏற்றிக் கொண்டே போனார். ராஜேந்திரரோ விட்டபாடில்லை. இந்தச் சங்கடமான சமயத்தில், பிரின்ஸிபாலுடன் வந்திருந்த குமாஸ்தா, ராஜேந்திரருக்குக் கண்ணைக் காட்டினார். அப்போதுதான் அவர் பேசாமல் இருந்தார். பிரின்ஸிபால் கோபத்தோடு போனார்.

ராஜேந்திரர் பரீட்சைக்குப் போனார். பிரின்ஸிபால் அவரையும் பரீட்சைக்கு அனுப்பினார். அவர் அபராதமும் செலுத்தவில்லை. உண்மை என்னவென்றால் அவர் பெயரைச் சேர்க்க மறந்து போய் விட்டார்கள். அதைக் குமாஸ்தா கண்டுபிடித்துச் சரி செய்து விட்டார். பரீட்சையில் ராஜேன்பாபு முதல் மார்க்கு வாங்கினார்.

படிப்பிலே சூரப்புலி ராஜேந்திரர். சரித்திரத்தில் மாகாணத்திலே முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், தத்துவ சாஸ்திரம் இரண்டிலும் நிறைய மார்க்குகள் வாங்கினார்.

இவ்வளவு படித்தாலும் அடக்கமான சுபாவம் உடையவர். ராஜேன் பாபு. ஆஹா ஊஹா என்று படாடோபம் செய்யமாட்டார். 'நிறைகுடம் தளும்பாது' என்று சொன்னால் நம்முடைய இந்தியக் குடியரசின் முதல் தலைவராகிய ராஜேன் பாபுவைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.


34