பக்கம்:விளையும் பயிர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்

வாய்பாட்டை மனசுக்குள்ளே அடுக்குவார். கணக்கைச் சரியாகப் போடமாட்டாமல் விழிப்பார்."முழிக்கிற முழியைப் பார்" என்று அப்பா சொல்வார். அதிலிருந்து மற்றோர் எதுகை வரிசை ஆரம்ப மாகும்."விழி- பழி - குழி - வழி -பிழி - சுழி"என்று வாய்விட்டே சொல்லிவிடுவார். அவருடைய ஞாபகமெல்லாம் கவிபாடுவதற்கு ஏற்றபடி போய்க்கொண் டிருந்தது. கருத்து எங்கெங்கோ பறந் தது. வார்த்தை பாட்டுக்கேற்ற ஜோடனைகளைச் செய்தது.

கருத்தும் வார்த்தையும் இணைந்தன, பாட்டு உதயமாகி விட்டது. பதினோரு வயசு கடக்கும்போதே பாரதியார் கவிபாடத் தொடங்கிவிட்டார். அவர் காதில் விழும் வார்த்தைகளெல்லாம் அவருடைய கவிக்கு உபயோகப்படும். விளையாட்டாகக் கவிதை இயற்றுவார். சின்னப்பையன் கவி பாடுகிறான் என்றால் கேட்கிற வர்களுக்கு ஆச்சரியம் உண்டாகாதா? எல்லோரும் அந்தப் பையனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடு, அதைப் பாடு என்று கேட்டுத் தூண்டிவிட்டார்கள். பாரதியார் அவர்கள் கேட்கிறபடியெல்லாம் கவிபாடுவார். அப்படிப் பாடுவதில் அவர் பிரமாதமாகச் சிரமப்படுவதே இல்லை. அருவி ஓடுகிறது; குயில் கூவுகிறது; மயில் ஆடுகிறது: சிங்கம் பாய்கிறது. இந்தக் காரியங் கள் பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. ஆனால் அவை அவைகளுக்கு இயற்கையானவை. அப்படித்தான் பாரதியாருக்கும் கவிபுனைவது என்பது உடன்பிறந்ததாகிவிட்டது.

‘ராஜா இருக்கிற சமஸ்தானத்தில் வித்துவான்கள் இருப் பார்கள். வேறு ஊர்களிலிருந்தும் அடிக்கடி பல புலவர்கள் வரு வார்கள். அவர்கள் பாரதியாரின் கவிதா சக்தியை உணர்ந்து வியப்படைவார்கள். தமக்குச் சமானமாக அவரை வைத்துக் கொண்டு பேசுவார்கள். அந்தச் சின்னப் பிள்ளையும் மேலும் மேலும் அதிசயப்படும்படியாகக் கவிகளைப் பாடிவந்தார்.

அந்த ஊரில் இருந்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. "இந்த இளம்பிள்ளை இவ்வளவு அருமையாகப் பாடுகிறானே, இவனுக்கு ஏதாவது பட்டம் அளிக்கவேண்டும்" என்று நினைத் தார்கள். படித்த வித்துவான்களும், பாட்டைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டும் அன்பர்களும் சேர்ந்து ஒரு பெரிய சபை கூட்டினார்கள். அந்தச் சபையில் பாரதி என்ற பட்டத்தைச் சுப்பிரமணியனுக் குச் சூட்டினார்கள்.