பக்கம்:விளையும் பயிர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

வந்து அப்பாவைப் போல அரண்மனை உத்தியோகம் பார்க்கத் தொடங்கினார். எட்டையபுரம் ராஜாவுக்கு அவரிடத்தில் அதிகப் பிரியம். ஆனாலும் பாரதியார் அந்த ஊரிலே இருக்க விரும்பவில்லை. மதுரைக்கு வந்து சில காலம் தமிழாசிரியராக இருந்தார். அந்த வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கு வந்து சுதேச மித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். பிறகு "இந்தியா" என்று ஒரு பத்திரிகையைத் தாமே நடத்தத் தொடங்கி னார். அப்போது அவருக்கு 35 வயசு, அவ்வளவு சின்ன வயசில் அரசியல் ஞானமும் கவிதா சக்தியும் பெற்றுப் பத்திரிகாசிரிய ராக விளங்கினவர்கள் உலகிலேயே மிகச் சிலர்.

இந்தியாவின் அடிமை வாழ்வைப் போக்க வேண்டுமென்ற கிளர்ச்சி அப்போது ஏற்பட்டிருந்தது. திலகர் சுயராஜ்யம் வேண் டும் என்பதைப் பிரசாரம் செய்தார். பாரதியாரிடம் தீவிரமான தேசபக்தி முளைத்து வளர்ந்தது. பல கவிதைகளைப் புனைந்தார். சுடச்சுட எழுதினார். அவருடைய எழுத்து வழவழவென்று இராது. வீரம் கொப்புளிக்கும். அரசாங்கத்தார் அந்தப் பத்திரிகைக்குத் தடை போட்டார்கள். தம்மையும் சிறையிலிடுவார்கள் என்று எண்ணிப் பாரதியார் புதுச்சேரிக்குப் போய்விட்டார். புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களுடையது. பிரிட்டிஷ் அரசாங் கத்தின் வெறுப்புக்கு ஆளான பல தேசபக்தர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். அரவிந்தர், வ. வே. சு. ஐயரைப் போன்ற தேசபக் தர்களோடு பாரதியாரும் போய்ச் சேர்ந்துகொண்டார். புதுச் சேரியில் சில காலம் இந்தியாப் பத்திரிகையை நடத்தி வந்தார். பிறகு அது நின்று போயிற்று. அற்புதமான கவிதைகளைப் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது பாடினார்.

1918-ஆம் வருஷம் பாரதியார் மறுபடியும் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் வேலை பார்த்தார். 1921 செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பாரதியார் உலக வாழ்வைப் பிரிந்தார்.

பாரதியார் 39-வருஷங்கள் வாழ்ந்தார். அதற்குள் அவர் செய்த காரியம் பல. அழகான கவிதைகளை, இதற்குமுன் இல்லாத சுவைகளையெல்லாம் காட்டும் இனிய கவிதைகளை, அவர் இயற்றியிருக்கிறார். சின்னக் குழந்தைகளுக்காக அவர் பாடிய பாப்பா பாட்டு மிகவும் நல்ல பாட்டு. குழந்தைகளெல்லோரும் படித்துப் பாடம் பண்ணிப் பாடவேண்டியப்பாட்டு.

40