பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. புகுவாயில்

முதுக்குறைவு

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’, ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்னும் பழமொழிகள், மக்கள் இளமையிலேயே திறமுடன் செயல் புரியவேண்டும் என்பதை அறிவிக்கும் ஒருவகை உள்ளுறை உவமங்களாகும்.

பயிர் முளையிலேயே செழுமை பெறவில்லை எனில் பிறகு முற்றி முதிர்ந்து மேனி கண்டு விளைச்சல் தருவது எவ்வாறு? ஓர் இளைஞர் இளமையில் செயல் ஆற்றுவதைக் கொண்டு இவர் முன்னுக்கு வருவார் - அல்லது உருப்பட மாட்டார் எனத் தெரிந்து கொள்ளலாம்.

‘உழவு செய்ய வேண்டிய காலத்தில் ஊர் சுற்றி விட்டு, அறுவடைக் காலத்தில் அரிவாள் எடுத்துக் கொண்டு போனால் எதை அறுவடை செய்வது? இது மக்களின் உழைப்பு அல்லது சோம்பல் நிலைக்கும் பொருந்தும்.

இளமையில் உழைக்காமல் ஊர் சுற்றியவர்கள் பின்னர் எதிர்பாரா விதமாய்ப் பெரிய அளவில் முன்னேறியதும் உண்டு. இது சிறுபான்மையே. இளமையில் ஊக்கம் காட்டாதவர்கள் பின்னர் முன்னேறாமையும், இளமையில் ஊக்கம் காட்டியவர்கள் பின்னர் முன்னேறியதுமே பெரும்பான்மையான நிலைமை. ஏறக்குறையப் பெரும்பான்மையை அளவுகோலாகக் கொண்டே ஒரு கொள்கையை வகுக்கமுடியும்.