பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

விளையும் பயிர் முளையிலே தெரியும்



சில காய்கள் பிஞ்சிலேயே பழுத்துப் பயனற்றதாகி விடுவதுண்டு. மக்களுள்ளும் இத்தகையோர் உள்ளனர். முதிர்ந்தவர்கள் செய்யக்கூடிய அரிய செயலை இளமையிலேயே செய்யும் திறமைக்கு ‘முதுக்குறைவு’ என்று இலக்கியங்களில் பெயர் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வயதிலேயே முதிர்ந்த திறமை என்பது இதன் பொருள்.

சுற்றியிருக்கும் சூழ்நிலையின் தொடர்பால் சிலர் தாழ்வதும் உண்டு-சிலர் உயர்வதும் உண்டு. ஆனால், எந்தச் சூழ்நிலையாலும் தாக்கப்படாமல், பிச்சைப் புகுந்தாவது கற்று முன்னேறியவர்கள் உளர். ஓரிடத்தில் எடுபிடிவேலை செய்து கொண்டே, முயன்று முன்னேறியவர்கள் பலர். இந்த முன்னேற்றம் கல்வித் துறை, தொழில்துறை, அறிவியல் ஆய்வுத் துறை முதலிய அனைத்துத் துறைகட்கும் பொருந்தும்.

இந்த முன்னேற்றங்களுள், மக்கள் வசதியாக வாழ்வதற்கு வாய்ப்பு உண்டாக்கித் தந்துள்ள (விஞ்ஞானம்) ஆய்வுத்துறையே முதன்மையான பெருமைக்கு உரியது.

அறிவியல் ஆய்வு

மக்களினம் தோன்றிய தொடக்கக் காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்தவர்கள் இப்போது வந்து நாம் வாழும் இந்த உலகைப் பார்ப்பார்களாயின், இது தாங்கள் பிறந்து வாழ்ந்த உலகமாக நம்புவார்களா?

இப்போதுள்ள மக்கள் எண்ணற்ற வசதிகளுடன் வாழ்வதற்கு உரிய அறிவியல், தொடக்கக் காலத்திலேயே தோன்றிவிட்டது. இருபது அல்லது இருபத்திரண்டாவது அகவையில் பெறும் எம். ஏ. பட்டத்திற்கு உரிய படிப்பு, ஐந்தாவது அகவையில் முதல் வகுப்பிலேயே தொடங்கிவிட்டது. அது போல் இது.