பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விளையும் பயிர் முளையிலே தெரியும் இன்னும் இயற்கையின் மறைபொருளை வெளிக்கொணர வேண்டிய அறிவியல் ஆய்வுகள் மிகப் பல. 'அறிதோறு அறியாமை கண்டற்று என்பது குறள் பகுதி. அறியுந்தோறும் அறியுந்தோறும் இன்னும் அறியாதவை நிரம்ப உள்ளன என்பது கண்டுபிடிக்கப் பட்டது என்பது கருத்து. எனவே, அறிவியலார் (விஞ்ஞானிகள்) பலர் எவ்வளவோ இதுவரை கண்டு பிடித்துள்ளனர். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை நிரம்ப உள்ளன. தோண்டத் தோண்டப் புதுப்புது ஊற்றுகள் புறப்படும். முதலில் கண்டுபிடித்துக் கூறிய ஒரு கொள்கையே, பின்னால் வந்த அறிஞரால் மறுக்கப்பட்டு வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து, புதுப்புதுக் கண்டுபிடிப்பு முயற்சி மேலும் தொடர வேண்டும் என்பது புலனாகும். அறிவியல் ஆய்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடக் கூடாது. கால்புள்ளி வைத்த அளவிலேயே இருக்க வேண்டும் அது தொடர்ச்சியாகச் செல்லும். முளையிலேயே நன்கு மேனிகண்டு விளையும் பயிராக விளங்கி முன்னேறி, மக்களுக்கு அளப்பரிய வாய்ப்பு வசதிகளை உண்டாக்கித் தந்துள்ள அறிவியலார் சிலர் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வரலாற்றைப் படிப்பவர்களுள் குறிப்பாக சிறப்பாக இளைஞர்கள் இளமையிலேயே திறம் பெறக் கற்று, இந்தக் கணிப் பொறி காலத்தில் பல ஆய்வுகள் செய்து வீட்டுக்கும் நாட்டுக்கும்-ஏன்-உலகுக்கும் நலம்பல சேர்ப்பார்களாக,