'கலைமகளி'ன் கருத்து
இந்தியாவில் சுதந்தரப் போர் வடக்கே 1857ல் தொடங்கியதென்று. அண்மையில் நூற்றாண்டு விழாவைக்கூடக் கொண்டாடினோம். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆட்சியாளரை எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை நாம் அறிவோம். அவருக்கு முன்பே மற்றொரு வீரர் சுதந்தர உணர்ச்சியுடன் போராடியதை அன்பர் திரு. ந. சஞ்சீவி ஒரு கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார். பூலித்தேவர் என்ற வீரருடைய வரலாற்றின் ஒரு பகுதி இவ்விதழில் வருகிறது. தமிழ் நாட்டு வரலாற்றுக்குக் கருவியாக அங்கங்கே மறைந்துள்ள ஏடுகளைத் தேடி ஆராய்ந்தால் இது போன்ற பல அரிய உண்மைகள் கிடைக்கும்.
-பிப்பிரவரி, 1958
★★★
தமிழ் நாட்டு வரலாற்றை இன்னும் தக்கவண்ணம் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முயற்சியையாரும் தொடங்கவில்லை. பாரத அரசாங்கம் இந்திய வரலாற்றை நல்ல முறையில் உருவாக்க ஆவன செய்து வருகிறது. அதில் தமிழ் நாட்டு வரலாறும் வரும். ஆனால், அது போதாது. தமிழ் நாட்டின் வரலாறு விரிவானது. பாரத நாட்டில் வழங்கும் மொழிகளுள் மிகப் பழைய மொழி தமிழ். அதன் இலக்கியத்தின் பழமையும் அத்தகையதே. ஆகவே, பழந்தமிழ் நாட்டு வரலாற்றை ஆராய்வதற்கு ஏற்ற பழைய இலக்கியங்கள் பல இருக்கின்றன. சரித்திர காலத்தில் வரன்முறையாக வரலாற்றை யாரும் எழுதி வைக்காவிட்டாலும், தமிழ் நாட்டுச் சரித்திரத்-