பக்கம்:வீர காவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

18

வருபொருளை ஆய்ந்துணரா மன்னன் ஓர்நாள்
      வாய்காவா துரைத்தமையாற் பிணங்கி வேழன்
“ஒருபொழுதும் ஈங்கினிநான் உறைதல் வேண்டேன்;
      ஒன்னார்தம் படைநாப்பண் சிக்குங் காலம்
வருபொழுது தன்மடமைக் கிரங்கி வேந்தன்
      வாய்விட்டுப் புலம்புவதைக் காண்பேன்” என்று
தரியலர்க்குக் கூற்றாவோன் பரிமா வேறித்
      தனிமையொடு கடிநகரின் நீங்கிச் சென்றான். 15

சினந்தெழுந்த படைமுதல்வன் புரவி ஏறிச்
      செல்நெறியுந் தேர்கிலனாய் மனத்தின் போக்கில்
வனங்கடந்து வழிகடந்து புனலா றென்னும்
      வளநதியுங் கடந்திருபால் இயற்கை காட்டும்
மனங்கவரும் எழிலெல்லாங் கண்டு துய்த்து
      வயந்தநகர்ப் புறத்தொருபாற் சார்ந்து, மேக
இனந்தவழும் மலைச்சாரல் நண்ணி, ஆங்கண்
      இழிதருமோர் அருவியினைக் கண்டு நின்றான். 16



வருபொருள் – எதிர்காலச் செய்தி. ஒன்னார், தரியலர் – பகைவர்.
நாப்பண் – நடு. பரிமா – குதிரை. கடிநகர் – காவல்நகர், தேர்கிலனாய் –
ஆராயாதவனாக. இழிதரும் – இறங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/21&oldid=911393" இலிருந்து மீள்விக்கப்பட்டது