பக்கம்:வீர காவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

காட்சிப் படலம்

இயல் 12

மாவேழன் விருந்தயர்ந்து கட்டிலின்மேல்
மயங்குகையில் எழிலணங்கை ஆங்குக் கண்டான்.

பஞ்சணையில் மென்தூவி பரவத் தூவிப்
      பனிமலரின் இதழ்பரப்பிச் சித்தி ரத்தால்
விஞ்சுமெழிற் கட்டிலில்வெண் துகில்வி ரித்து
      விரையகிலின் புகைநிறைத்துத் தோர ணங்கள்
துஞ்சும்அறை எங்குமெழில் விளங்கப் பண்ணித்
      துய்யமணி ஒளிவிளக்குத் தொங்கக் கட்டிச்
செஞ்சுவைய தேறல்வகை அருகில் வைத்துச்
      செய்வனசெய் தகன்றாரங் கேவல் மாதர்.37

வன்மைமிகு திண்டோளன் வயமா வீரன்
      வண்ணஎழிற் கட்டில்மிசை அமர்ந்தான்; தென்றல்
மென்மைமிகு துகிலசைத்துச் சாள ரத்துள்
      மெல்லெனவந் துடல்வருட, வானத் திங்கள்
புன்மையிருள் பலகணியுட் புகுதா வண்ணம்
      பொலிவுறவே தண்கதிர்கள் செலுத்தி நிற்கத்
தன்மையினைக் கண்டுள்ளம் மகிழ்ந்தி ருந்தான்;
      தனைமறந்து விழிகுவிய அணையிற் சாய்ந்தான்.38


மென்தூவி -அன்னத்தின் மெல்லிய இறகு. துகில் - ஆடை.

விரை - மணம் துஞ்சும் - தொங்கும் தேறல் - மது. வயம் -வெற்றி,

சாளரம் - சன்னல். வருட - தடவ, பலகணி - சன்னல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/32&oldid=911494" இலிருந்து மீள்விக்கப்பட்டது