பக்கம்:வீர காவியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீரகாவியம்

30

நறவருந்திக் களித்தமையால் மயக்கங் கொண்டு
      நனவிழந்து மெய்ம்மறந்து துயிலுங் காலை
மறமுயர்ந்த விரிமார்பன் அருகி ருந்த
      மதுக்கிண்ணம் விழுந்துருளும் அரவங் கேட்டே
உறவெழுந்து கண்துடைத்து நிமிர்ந்தான்; ஆங்கண்
      ஓவியத்துப் பாவையென ஒருத்தி நின்றாள்;
திறமிகுந்த உளம்நடுங்க உடல்வி யர்க்கத்
      திகைத்திருந்தான் பகைப்புலத்தும் திகைப்பே யில்லான் 39

இவளனைய எழில்மகளை உலகில் யாண்டும்
      இதன்முன்னர் அவ்வீரன் கண்ட தில்லை;
குவளைவிழி கொவ்வையிதழ் பவழ மேனி
      கொண்டவளை அழகுருவை இன்று கண்டான்;
தவளநிறத் துகிலுடுத்த தையல் நோக்கித்
      தலைகுனிந்தாள் கடைக்கணித்தாள் இதழின் ஓரம்
தவழுமெழிற் புன்னகையைக் காட்டி நின்றாள்;
      தனையிழந்தான் கனவிதுவோ எனநி னைந்தான்.40


அரவம் - ஒலி. தவளம் - வெண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/33&oldid=911496" இலிருந்து மீள்விக்கப்பட்டது