பக்கம்:வீர காவியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீரகாவியம்

32

புள்ளுறங்கும் நள்ளிரவில் யாரு மிங்குப்
      புகுதரிய தனியறையில், அச்ச மின்றிக்
கள்ளருந்தித் துயில்வேன்முன் வந்து நின்ற
      காரிகையார்? எப்பொருட்டால் இங்கு வந்தாள்?
உள்ளிருந்து புறத்தகல்வாள் என்றன் நெஞ்சை
      உடன்கொண்டு நீங்கினளே! கொவ்வைச் செவ்வாய்
வெள்ளெயிற்றின் ஒளிசிறிதே இதழில் மின்ன
      விரியாமல் விரித்துநகை செய்து சென்றாள்!’43

என்றுபல நினைந்திரங்கி உழலும் வீரன்,
      ஏந்திழையின் கருமேகச் சுருளின் கூந்தல்
ஒன்றுமலர் ஒன்றங்கு நிலத்திற் கண்டான்;
      ஓடோடி உவந்ததனை எடுத்து மோந்து,
வென்றகன்ற எழிலணங்கின் நினைவே விஞ்சி,
      விழிமூடிக் கற்பனையில் மிதந்து சென்றான்;
துன்றமரின் புறப்பொருளே வாழ்வாக் கொண்டோன்
      துறைசெறிந்த அகப்பொருளின் வாயில் கண்டான் 44

காதலெனும் அகம்புகுவோர் இமைகள் என்னும்
      கதவுகளை மூடாராய் இமையா நாட்டம்
பூதலமேற் பெற்றிடுவர்; இரவில் கட்டிற்
      புழுவாகப் புரண்டிடுவர்; வெய்து யிர்ப்பர்;
சாதலினுங் கொடுந்துயரில் உழல்வர்; ஈது
      தண்கடல்சூழ் ஞாலத்தின் இயற்கை யன்றோ?
வேதனையில் உழல்வீரன் உறக்க மின்றி
      வெய்துயிர்த்துப் புரண்டிருந்தான் பஞ்சின் சேக்கை 45


வெள்எயிறு - வெள்ளியபற்கள்.ஒன்றும்மலர் - பொருந்திய மலர்.

விஞ்சி - மிகுந்து துன்றுஅமர் - நெருங்கியபோர். புறப்பொருள் - வீரம்

துறை - பலவகைத்துறைகள் பொருந்திய. அகப்பொருள் - காதல்.

நாட்டம் - விழி. சேக்கை - படுக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/35&oldid=911500" இலிருந்து மீள்விக்கப்பட்டது