பக்கம்:வீர காவியம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

காட்சிப் படலம்

சாதலுக்குத் துணைபோகும் சமரே கண்டோன்
      காதலுக்குத் துணையாகும் உயிரைக் கண்டான்;
வீதலுக்குத் துணைபோகும் வேலே கண்டோன்
      விழைவுக்குத் துணையாகும் விழியைக் கண்டான்;
வேதனைக்குத் துணைபோகும் களமே கண்டோன்
      விண்வெளிக்குத் துணையாகும் நிலவைக் கண்டான்;
காதினிக்கப் போர்முரசின் ஒலியே கேட்டோன்
      கடுந்தனிமைப் பெருமூச்சின் ஒலியைக் கேட்டான்.46

குறையிரவும் சிறிதேனும் நகர்த லின்றிக்
      குடியிங்குக் கொண்டதென உணர்வு கொண்டான்;
நிறைமதியின் தண்கதிர்கள் பகைவர் வீசும்
      நெடுவேல்க ளெனப்பாயத் தளர்ச்சி கொண்டான்;
விரைமலரின் இதழ்களெலாம் உடலு றுத்தி
      வெப்புறுத்தித் துயர்ப்படுத்த வெறுப்புங் கொண்டான்;
அறைமதில்கள் சிறைமதில்போல் விளங்கக் கண்டான்;
      அரும்பிவரும் காதலெனும் நோயில் வீழ்ந்தான்.47


சமர் - போர், வீதல் - இறப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/36&oldid=911502" இருந்து மீள்விக்கப்பட்டது