178 ✦ வெண்பூ மனம்
“எனக்குப் பாப்பா பொறந்துருக்கு...” என் மனசின் இனிப்பு ஊரெல்லாம் பரவியது.
அப்படித்தான் பரமுச் சித்தியிடமும் மிட்டாய் கொடுத்தேன்.
“என்னப்பா முட்டாயி?”
“பாப்பா பொறந்துருக்கு...”
“பொட்டைப் புள்ளையா?" சித்தியின் முகமாற்றம், சிடுசிடுப்பாக நிறமாற்றம்.”
“பொட்டைப்புள்ளை பெத்ததுக்காக முட்டாய்? ச்சேய், போ, அங்குட்டு... புத்திகெட்டுத் திரியாதே...”
வாங்கிய மிட்டாயை வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டுப் போன பரமுச் சித்தியையே வருத்தமாகப் பார்த்தேன். என் பால்பாயசத்தில் உப்பு அள்ளிப் போட்ட மாதிரியிருந்தது.
என் வீட்டுக் கிரகப்பிரவேசம். ஊர்ஊராகச் சுற்றி, உறவுகளைத் தேடி, சிரித்த முகம் காட்டி, பத்திரிகை வைத்துக் கொண்டிருந்த களைப்பு, ஆயாசம். ரொம்ப நாளைக்கு முன்பே பிழைப்புத் தேடி திருத்தங்கல் வந்துவிட்ட பரமுச் சித்தி. ‘அவர்களிடமும் ஒரு பத்திரிகை வெச்சுட்டா நல்லது...’
சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்து துழாவி விசாரித்தேன். பரமுச் சித்தி மகள் இருக்கிற வீடுதான் தெரிந்தது. மகன் வீடு தெரியவில்லை. ‘மகனிடம்தானே பரமுச் சித்தி இருப்பார்கள்? ம்... என்ன செய்ய? மகளிடமும் ஒரு பத்திரிகையை வெச்சுட்டுப் போயிருவம்.’