மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 179
சிறிய வீடு. நெரிசலான குறுகலான தெரு.
“தங்கச்சி... தங்கச்சி...!”
“யாருப்பா அது? கண்ணு எழவும் தெரியலே...”
தட்டுத்தடுமாறி வருகிற பரமுச் சித்தி. முதுமை நர்த்தனமாடியிருந்தது. நனைந்த காகிதமாக நைந்திருந்தாள்.
“என்ன சித்தி, இங்க இருக்கீக? மகன் வீட்லே நீங்க இல்லியா?”
“யாரு... தங்கச்சாமியா...? வா, வா. சின்னராசுப்பய தங்கமான பயதான். வந்தவள் ராட்சஸி... கொத்திக் கொதறி வெளியே தள்ளிட்டா என்னை... ஊமையா இருந்துக்கிட்டான், கள்ளப்பய...”
“பெறவு?”
“பெறகென்ன? பொம்பளைப் புள்ளைதான் ஆதரிக்கா... வாம்மான்னு கூப்பிட்டு தாய்மாதிரி அணைச்சுக்கிட்டா. பொம்பளைப் புள்ளைகதான், பெத்தவுகளுக்கு அம்மா மாதிரி...”
அன்று என் கைக்குள் திருப்பித் திணித்த பெப்பர் மிட்டாயின் ஞாபகம்.
தலைப்பிள்ளையாக வந்து பிறந்த பாப்பாவை நினைத்து இப்போதும் பால்பாயசம் குடிக்கிறது, என் மனசு.
—ஆனந்த விகடன், 10-2-2002