பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 98


ஒரு காரியத்தை அவன் பல மாறுபட்ட கோணங்களிலிருந்து நோக்குவானேயன்றி ஒரே ஒரு கோணத்திலிருந்து மட்டும் நோக்குவதில்லை. அதுவும் தன் குறிப்பிட்ட கோணத்திலிந்து மட்டும் நோக்குவதோடு அமைவதில்லை. அவன் பிறரின் கண்களைக் கொண்டு நோக்குகின்றான்; அவர்களின் காதுகளைக் கொண்டு கேட்கின்றான்; அவர்களின் மனங்களைக் கொண்டு எண்ணுகின்றான்; அவர்களுடைய உள்ளங்களைக் கொண்டு உணர்ச்சியடைகினறான். எனவே, தன்னிலிருந்து பெரிதும் மாறுபட்ட மனிதரையும் அவன் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்களுடைய வாழ்க்கையின் பொருள் அவனுக்குப் புலனாகின்றது. நல்லெண்ணம் என்னும் உணர்ச்சியில் அவன் அவர்களுடன் ஒன்றுபட்டவனாகி விடுகின்றான்.

“எளியோர் என் கவனத்தை ஈர்க்கின்றனர்; அவர்களுடைய பசி என்னுடைய பசி, நான் அவர்களுடைய இல்லங்களில் அவர்களுடனேயே இருக்கின்றேன். அவர்களுடைய வறுமையில் நானும் பங்கு கொள்கின்றேன். இரப்போருடைய கந்தலுடைகள் என் உடல்மீது இருப்பன போலுணர்கின்றேன்; அந்த நேரத்திற்கேனும் நான் ஏழையாகவும், இகழ்ச்சிக்குரிய மனிதனாகவும் ஆகி விடுகின்றேன்” என்று பால்ஸாக் கூறியுள்ளார். துன்பப்படுகின்ற ஒருவனுக்குச் செய்யப்படுகின்ற உதவி இறைவனுக்கே செய்யப்பட்டதாகும் என்று பால்ஸாக்கை விடப் பெரியவராகிய ஒருவர் கூறியிருப்பதை இது நினைவுபடுத்துகின்றது.

இரக்கம் எல்லா மனிதர்களின் உள்ளங்களுக்கும்