பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

ஜேம்ஸ் ஆலன்


நிகழ்ச்சி காரணமாக அதே மனிதரிடம் அன்பின் மறுகோடிக்குச் சாய்ந்து விடுவதைக் குணவியல்பின் குறைபாடாகவே கொள்ள வேண்டும். அது ஒரு தன்னலச் சூழ்நிலையேயாகும். ஏனெனின், நமக்கு மகிழ்ச்சியூட்டும் ஒருவனுக்கு மட்டும், அதுவும் அவன் மகிழ்ச்சியூட்டுகின்றபோது மட்டும் அன்புச் செயல் செய்வதென்பது அவன் தன்னலத்தை மட்டும் கருதுவதையே காட்டும்.

உண்மையான அன்பு மாற்றப்பட முடியாதது. அதைச் செயற்படுத்த வெளித் தூண்டுதல் தேவையில்லை. அது வேட்கை கொண்ட உயிர்கள் எப்போதும் அள்ளிப் பருகத்தக்க கேணியாகும். அது என்றுமே வற்றுவதில்லை. அன்பு ஒரு வலிமை வாய்ந்த அறமாகும்போது, நமக்கு மகிழ்ச்சியூட்டுவோர்க்கு மட்டும் வழங்கப்படுவதன்று. ஆனால், நமது விருப்பத்திற்கும், கருத்திற்கும் எதிராகச் செயல்படுவோர்க்கும் வழங்கப்படுவதாகும். அஃது இடைவிடாததும், என்றுமே மாறாததுமான மகிழ்ச்சி ஆர்வத்தின் ஒளியாகும்.

மக்கள் எண்ணி இரக்கப்படுகின்ற சில செயல்கள் உள்ளன; அத்தகையவை அன்பில்லாச் செயல்கள். மக்கள் எண்ணி இரக்கப்படாத பிறசெயல்கள் உள்ளன; அத்தகையவை அன்புச் செயல்கள். மக்கள் தாம் மொழிந்த, செய்த கொடுமையான செயல்களுக்காக வருத்தப்படுகின்ற நாள் வந்து சேருகின்றது; ஆனால் அவர் மொழிந்த, ஆற்றிய அன்பான செயல்களுக்கான மகிழ்ச்சியான நாள் எப்போதும் அவர்களுடனேயே இருக்கின்றது.