பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 104




அன்பின்மை, மனிதனின் பண்பைக் கெடுத்து விடுகின்றது. காலப்போக்கில் அவனுடைய முகத்தைக் கெடுத்துவிடுகின்றது. அன்பினால் அவன் அடைந்திருக்கக் கூடிய வெற்றியின் நிறைவைக் கெடுத்து விடுகின்றது.

அன்புடைமை பண்பியல்பை அழகு படுத்துகின்றது. ஆண்டுகளின் வளர்ச்சிக்கேற்ப அவனுடைய முகத்தை அழகு படுத்துகின்றது. மனிதனின் நுண்புலத் திறமைகள் அவனுக்கென உரிமைப்படுத்துகின்ற வெற்றியின் நிறைவுடைமை பெற வழி கோலுகின்றது. மனிதன் அன்பு தோய்ந்ததின் பயனாக அவனுடைய ஆக்கம் கனிந்து செழிக்கின்றது.

பெருந்தன்மை பரந்த நெஞ்சங்கொண்ட அன்புடைமையோடு பொருந்தியிருக்கின்றது. அன்புடைமை, பணிவு மிக்க தங்கையானால் பெருந்தன்மை வலிமை மிக்க தமையனாவான். தன் போக்கான, திறந்த நோக்குடைய, தகைமை வாய்ந்த குணவியல்பு எப்போதும் கவர்ச்சியுடையதாகும், செல்வாக்குடையதாகும். கஞ்சத்தனமும், இழிந்த நோக்கும் எப்போதும் எதிரிடையானவை. அவை இருள்படர்ந்தவை; குறுகியவை; கருத்தற்றவை. அன்புடைமையும், பெருந்தன்மையும் எப்போதும் கவர்ச்சியுடையவை. அவை ஒளி படர்ந்தவை; வளர்ச்சி உறுபவை; வெளிப்படையானவை; கருத்துடையவை. தடைபடுத்தும் ஒன்று தனிமைக்கும், தோல்விக்கும் வழிகாட்டுகின்றது. கவர்ச்சியுடைய ஒன்று ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் வழிகாட்டுகின்றது.