பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 108


வாதாடலால் அன்று. நாம் ஒரு பொருளையோ ஒருவனையோ அறிந்துகொள்ளு முன்பு, நமது வாழ்வு அதனுடையவோ அவனுடையவோ வாழ்வுடன் தொடர்புற்றாக வேண்டும். வாதாடல் வெளிப்புறத் தோலையே பகுத்தாராய்கின்றது. ஆனால், இரக்கம் நெஞ்சத்தையே எட்டி விடுகின்றது; பிறரிடம் குறை காண்பவன் உருவையும், உடையையும் பார்த்துவிட்டு, மனிதனைக் கண்டுவிட்டதாக எண்ணுகின்றான். இரக்கச் சித்தமுடையோன் மனிதனைக் காணுகின்றான்; உருவையும், உடையையும் கருத்தில் கொள்வதில்லை.

வெறுப்பின் ஊடே ஒவ்வொருவனும் மற்றொரு வனைத் தவறாக மதிப்பிடுகின்ற ஒரு பிரிவினை உள்ளது. அன்பின் அனைத்திலும் ஒவ்வொருவனும் மற்றொருவனைப் புரிந்துகொள்கின்ற ஓர் ஒற்றுமையுள்ளது. இரக்கம் அன்பின் தூய்மையான வடிவமாக இருப்பதால், அது மக்களுடைய, பெருள்களுடைய நெஞ்சத்தையே காணுகின்றது. பரந்த நெஞ்சம் இருப்பதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் மிகவுயர்ந்த கவிஞராகத் திகழ்கின்றார். மனித நெஞ்சத்தைக் குறித்தும், உயிருள்ளன உயிரில்லாதன இவற்றின் இயல்பைக் குறித்தும் அத்துணை ஆழ்ந்த அறிவினை, இலக்கியம் அனைத்திலும் வேறு எவருமே, எடுத்துக் காட்டவில்லை. தன்னியல்பான ஷேக்ஸ்பியர் அவருடைய நூல்களில் காணக் கிடைப்பதில்லை; ஏனெனின், இரக்கத்தின் காரணமாக அவர் தம் நாடகமாந்தாகளுக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றார். அவர் தற்காலிகமாக மேதை, தத்துவஞானி, கிறுக்கன், மடையன், குடிவெறியன்,