பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

ஜேம்ஸ் ஆலன்


மாட்சிமையுடையதுமான சட்டம் அனைத்துமாகி விடுகின்றது. ஒரு வழக்கை முடிவு செய்வதில் நீதிபதி சட்டத்தை மறந்து தம் போக்கான உணர்ச்சிக்கும், விருப்பு வெறுப்பிற்கும் உட்பட்டுவிடின் அவருடைய விழுப்பம் மறைந்துவிடும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு நிலைபேறு கொண்ட விதியின் வழிநின்று செயலிலீடுபடுகின்ற அளவிற்கேற்ப அவன் அமைவடக்கமும், விழுப்பமும் கொண்டிருக்கின்றான். அவ் விதி நேர்முறையானதாகத் தகர்க்கப்பட முடியாததாக இருப்பதுவே இன்றியமையாததாகும். அத்தகைய விதியை மனிதன் பின்பற்றி ஒழுகி, அதனின்றும் தடுமாற்றம் கொள்ளவோ தனி மனிதப் பண்புக் கூறுக்குத் தாழ்வுறவோ செய்யாதிருக்கும் வரையில் படையெடுக்கின்ற பற்றுகள், விருப்பு வெறுப்புகள் ஆசைகள் எத்துணைதான வலிமையுடையனவாய் இருப்பினும், நடுநிலை பிறழா விதியின் வெல்ல முடியாத வலிமையின் முன் அவை வலுவும் பயனும் அற்றனவாகிவிடும். இறுதியில், அவற்றினுடைய கூட்டானதும், தகுதியற்றதுமான குழப்பம் அவனுடைய ஒருமுகமான, மாட்சிமைப்பட்ட நேர்மைக்கு இணங்கிவிடும்.

தன்னாண்மை வலிமையும், நல்ல கட்டுப்பாடும் கொண்ட மனிதனின் பிறப்புரிமையாகும். மனிதர் அனைவரும் தம் உரிமையை நாடி அவற்றைப் பெற முயலுகின்றனர். ஏதேனும் ஒரு வகையில் விடுதலை அடைதலையே அனைவரும் நாடுகின்றனர்.