பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

ஜேம்ஸ் ஆலன்


தொடக்கத்திலேயே தற்சார்புப் பொறுப்பென்னும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாக வேண்டும். வீட்டிலே, நீதிமன்றத்திலோ, கோயிலின் சொற்பொழிவு மண்டபத்திலோ, மாளிகையிலோ, பள்ளிக் கூட அறையிலேயோ பணப்பெட்டியருகிலோ கூட்டாகவோ தனியாகவோ, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் போதோ விளையாடும் போதோ, அவன் எங்கெங்கிருப்பினும் அவனுடைய ஒழுகலாறு நன்மைக்கோ தீமைக்கோ அவனுடைய வாழ்க்கை நெறியைப் பாதிக்கும் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், நடத்தையில் ஒரு நுட்பமான வசியம் இருக்கின்றது. அது தொடுகின்ற ஒவ்வோர் ஆண், பெண், குழந்தையிடத்தும் ஒரு முத்திரையைப் பொறித்துச் செல்கின்றது. அம் முத்திரையே மனிதர் ஒருவர் மீதொருவர், கொண்டிருக்கின்ற மனப்போக்கை வரையறுக்கும் கூறாகவும் இருக்கின்றது.

இக் காரணம் பற்றியே ஒன்றுபட்ட சமுதாயம் அனைத்திலும் நற்பழக்க வழக்கங்களைப் பேணி வளர்த்தல் அத்துணை இன்றியமையாமை வாய்ந்ததாக இருக்கக் காண்கின்றோம். உலைவு படுத்துவதும், உடன்பாடற்றதுமான மனக்குறைபாட்டை நாம் நம்முடனே கொண்டு செல்வதாயிருப்பின், நம் காரியங்களில் அது நச்சூட்டும் என்பதைப் பெயரிட்டு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆற்றல் வாய்ந்த திராவகம் நேர்த்தியான உருக்குக் கம்பியை அரித்துத்தின்று அதனுருவத்தைச் சிதைத்து விடுதல் போன்று. நமது முயற்சிகள் அனைத்தையும் மனக்குறைபாடு அழித்து நமது மகிழ்ச்சியையும், ஆக்கத்தையும் சின்னா பின்னமாக்கி விடுகின்றது.