பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 54


மனவலிமையும், குணவியல்புத் திட்பமும், சாதனைக்கான பெரும் ஆற்றலைத் தரும். சினமிக்க மனிதன் தனது மனவாற்றல் சிதறியதால் வலுவிழந்தவனாக்கப்பட்ட வலிமையுடைய மனிதனேயாவான். தனது வலிமையை வெளிக்காட்ட அவனுக்குத் தன்னடக்கம் தேவைப்படுகின்றது. வாழ்வின் எத் துறையிலாயினும் சரி, அமைதியான மனிதன் அவனை விட எப்போதும் மேம்பட்டவனேயாவான். வெற்றி, பிறரைக் குறித்த மதிப்பீடு இரண்டிலும் அவன் எப்போதும் முன்னவனை மிஞ்சிவிடுவான். எம் மனிதனாயினும் சரி, மனத்தின் தீய பழக்கங்களையும், தீய இயல்புகளையும் ஊட்டி வளர்க்கத் தன் ஆற்றல்களைச் சிதறடிக்க இடங் கொடுப்பவனாக இருக்கவியலாது.

கேடுதரும் இன்ப நுகர்வு ஒவ்வொன்றும் ஏதேனும் ஒருவகைத் துன்பமாகவோ குறைபாடாகவோ அவனிடமே திரும்பி வந்துவிடும். கலவரப்படவோ கீழ்த்தரச் சார்புகளுக்குப் பரிந்து உதவவோ செய்கின்ற ஒவ்வொரு கணப்பொழுதும் அவனுடைய முன்னேற்றத்தை மேலும் கடினப் பாடுடையதாக்கி விடும்; அவன் அடையவேண்டுமென்று விரும்பிய உயர்ந்த வானுலகை எய்துவதினின்றும் அவனைப் பின்னிழுத்துப் பிடித்துக் கொள்ளும்; நேர்மாறாக, தனது ஆற்றல்களை ஒழுங்குறுத்தித் தன் வாழ்வின் சிறப்புக் கடமையை நோக்கி அவற்றைத் திருப்பிவிடுபவன் விரைவான முன்னேற்றமடைவான்; அவன் வெற்றியெனும் பொன்னகரத்தை அடைவதிலிருந்து அவனை எதுவும் தடுத்து நிறுத்த இயலாது.