பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 62


கொண்டதாக மாறிவிடுகின்றது. ஆகவே, வளப்பமுள்ள மனங்களின் கருத்துக்கள, திட்டங்கள் இவற்றுடன் அவன் சமமாக முன்னேறத் தவறிவிடுகின்றான். வளப்பமுள்ள மனம் என்றுமே வற்றாததும், புத்துயிர் தருவதும், வரட்சியான வேளைகளில் புதிய ஊக்கம் ஊட்டுவதுமான நிதியைப் போன்றதாகும். வளப்பம் கொண்ட மனிதர் புதுக்கருத்துகள் கொண்ட மனிதராவர். பிறர் மங்கி மறைந்துபோகின்ற வேளையில் புதுக்கருத்துகள் கொண்ட மனிதர் செழிப்படைகின்றனர்.

வளப்பம் பண்பட்டு நிறைவு நிலையடைதலே விளைவு என்ற உற்பவமாகும். உற்பவம் எங்குளதோ அங்கே தனித்திறமையும் இருக்கின்றது. தனித்திறமை படைத்த மனிதரே உலகின் ஒளிகளாவார். மனிதன் எந்த வேலையைச் செய்வதெனினும் சரியே, அவன் தன் சொந்த வளப்பங்களைக் கொண்டே அதைச் செய்ய வேண்டும். தனது வேலையில் உள்ளார்ந்து ஈடுபட்டு அதைப் புதியதாகவும், உற்பவமானதாகவும் ஆக்கிவிடவேண்டும். விளைவினை உண்டாக்கும் மனிதர் உலகினரின் காதினைக் கவர்ந்துவிடுகின்றனர். அவர்கள் முதன் முதலில் புறக்கணிக்கப் படலாம். ஆனால், இறுதியில் அவர்கள் ஒப்புக் கொண்டு மனித இனத்தின் இலக்குகளாகி விடுகின்றனர். மனிதன் உற்பவத் திறமையை ஒரு முறை பெற்றுவிட்டானெனின் தனது குறிப்பிட்ட துறையின் அறிவிலும், திறமையிலும் மக்களிடையே ஒரு தலைவராகத் தன்னிடத்தைப் பெற்றுவிடுகின்றான். ஆனால், உற்பவத்தைப் புகுத்தவியலாது; அதை வளரச் செய்யவே இயலும்;