பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

ஜேம்ஸ் ஆலன்


நாணயமுடனிருந்து எந்த மனிதனும் செழிப்படையவியலாது என்று பொய்பேசும் ஒருவர் நம்மிடம் கூறக்கூடும். அத்தகைய மனிதன் என்றுமே நாணத்துடனிருக்க முயன்றதில்லை என்றிருக்கையில் அவன் எவ்வாறு இதையறிந்து கொள்ள முடியும். மேலும், அத்தகைய மனிதனுக்கு நாணத்தைப் பொறுத்த அறிவு எதுவும் கிடையாது. எனவே, அவனுடைய மொழி அறியாமையின் கூற்றேயாகும். தன்னைப்போலவே பிறர் அனைவருமே அறியாமையும், பொய்ம்மையும் நிறைந்தவரே என மூடத்தனமாக எண்ணுகின்ற அளவிற்கு அறியாமையும், பொய்ம்மையும் ஒருவனைக் குருடனாக்கிவிடுகின்றன.

ஏறத்தாழ நாணயமாக இருப்பது என்பது நாணயமின்மையைக் குறிக்கும் பிறிதொரு சொல்லேயாகும். நேரான வழியினின்றும் சிறிது விலகுபவன் மேலும் அதிகமாகவே விலகுவான். நேர்மையெனும் நிலையான நியதி அவனுக்குக் கிடையாது. தனது சொந்த நலனையே எண்ணிக் கொண்டிருக்கின்றான். தனது குறிப்பிட்ட நாணயமின்மை வெளிப்படையானதும், கேடு பயக்காததுமான நிலை என்றும், தனது அண்டை வீட்டானைப்போல் தான் அத்துணைத் தீயவனல்லன் என்று தன்னைத்தான் தேற்றிக் கொள்வது, ஒழுக்க முறைகளைக் குறித்து அறியாமை உண்டுபண்ணுகின்ற பலவகையான மயக்கங்களில் ஒன்றேயாகும்.

வாழ்வில் பல்வேறுபட்ட தொடர்புகளிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் மனிதனுக்கு மனத்தின் நேர்மையுடன் நடந்துகொள்வதே சால்பின் உள்ளுயிர்.