பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. மலைச்சாரலிலே

சோலையில் தங்கி உதயணன் முதலியவர்கள் அளவளாவிக் கொண்டிருந்தபோது இடவகனின் படைவீரர்கள் பக்கத்திலே இருந்த சயந்தி நகரத்தைச் சார்ந்த மலைச்சாரலில், உதயணன் தத்தை முதலியோர் தங்குவதற்கேற்ற பட மாடங்களையும் ஏனையோர்க்குரிய படைவீடுகளையும் அமைத்துக் கொண்டிருந்தனர். மறுகும் முற்றமும் முன்றிலுமாக வகுத்து அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாடி வீடுகளின் தோற்றங்கள் மலைச்சாரலில் தனி அழகுடனே தோன்றின. தூயவெண் பட்டுக்களால் இயற்றப்பட்ட பட மாடங்கள் தொலைவிலிருந்து காண்பதற்கு விசும்பிலே கட்டிய கண்ணாடி நகர் போலத் தெரிந்தன. வாசவதத்தைக்கு இயற்றிய பாடி வீட்டில் பள்ளிமாடம், அன்றிலும் விளையாடு முன்றில் முதலியவற்றை அழகுறச் சமைத்திருந்தனர். சந்தனப் பலகை, மணிக்கலப் பேழை இருக்கைக் கட்டில், ஆலவட்டம் முதலிய அலங்காரப் பொருள் அதில் நிரம்பியிருந்தன. உதயணனுக்குரிய படமாடக் கோவிலிலும் ஒரு சிறந்த அரசனுக்கு வேண்டிய அணிகலன்களும் பொருள்களும் மிகுந்திருக்குமாறு இயற்றப்பட்டிருந்தது. பலவகைக் குற்றிளையோர் ஆடவரும் மகளிருமாகப் பணி செய்யக் காத்திருந்தனர். ஒருவருமே அற்ற சூனியப்பிரதேசமாகிய அந்தக் காட்டில், மலைச்சாரலில் இயற்றப்பட்ட நகரில் இவ்வளவு பேர் தோன்றியது புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போலிருந்தது. நல்ல நேரம் பார்த்து உதயணன் முதலிய யாவரும் சோலை நீங்கி மலைச்சாரலில் அமைக்கப் பெற்ற நகரில் குடிபுகுந்தனர். பெண்யானையின்மீது வேகமாக வந்த உடல் நோவுதீர மருத்துவ முறைப்படி உணவு சமைக்கப் பட்டது. நாழிகைக் கணக்கர் உண்ண வேண்டிய பொழுதறிந்து கூறினர். இரவும் பகலுமாக விடாது பயணம் செய்த அலுப்பு உதயணனைச் சோர்வு கொள்ளச் செய்திருந்தது. வேடர்களோடு போர் செய்த களைப்பு வேறு அவனை வருத்தியது.