பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலைச்சாரலிலே

101

உடல் அலுப்பு நீங்க எண்ணெய் பூசி நீராடிவிட்டுப் பின்பு உண்ணலாம் என்று கருதினான் உதயணன். உடல் ஒளிகுறைந்து வாட்டங் கண்டிருந்தது. வல்லவன் வகுத்த வாசனை பொருந்திய எண்ணெயைப் பூசிக்கொண்டு குளிர்ந்த நீரில் மனம் விரும்பி வெகு நேரம் உடல் குளிர ஆடினான் உதயணன். நீராடி முடிந்தபின் நண்பர்கள் ஒன்றாக உண்ண அமர்ந்தனர். வெகு நாள்களுக்குப் பிறகு நேர்ந்த இந்த அரிய அமைதியான வாய்ப்பு மூவர் மனத்திலும் மகிழ்ச்சியை நிறையச் செய்திருந்தது. மகிழ்ச்சி நிறைவோடு உதயணன், வயந்தகன், இடவகன் மூவரும் உண்டனர். சிரிப்பும் விளையாட்டுமாக உண்டு முடிக்க நேரமாய்விட்டாலும் உவகை மிகுதியில் பொழுது போனதே தெரியவில்லை நண்பர்களுக்கு. பிடியில் வழிப்பயணம் செய்த இளைப்பு. உறக்கமின்றிப் பல இரவுகளைக் கழித்தமை, வேடர்கள் தொல்லை, தீயினால் ஏற்பட்ட வேதனை, இவ்வளவும் தீர நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான் உதயணன்.

வாசவதத்தையை ஆயமகளிர் நன்கு நீராட்டினர். அழகிய கற்சுனையின் நடுவே பொற்பாவைபோல நின்று, காண்போர் மகிழ நறுநீராடினாள் தத்தை. நீராடியபின் பசிதீர அமுதம் போன்ற உணவை உண்ணச் செய்தனர். இரண்டு நாட்களாக உண்ணாமலிருந்து பசி மிகுந்திருந்த தத்தை நன்கு உண்டாள். சுவைமிக்கதாகச் சமைக்கப் பட்டிருந்தது அந்த நல்லுணவு. உணவு முடிந்தபின் தோழிப் பெண்கள் துயர்தீரப் பல பணிவிடைகள் செய்தனர். யாவரும் ஒய்வு கொண்டனர். அப்போது மலைச்சாரலில் நகரின் அமைதியான தோற்றம் அழகின் எல்லையாக விளங்கியது. படையோடு வந்திருந்த குதிரைகள், யானைகள் இவை யாவும் பெரிய பெரிய மரங்களிலே கட்டப்பட்டிருந்தன. நகரின் அமைதியைக் கலைத்துக் கொண்டு யானைகளின் முழக்கம் மலைச்சாரலில் கேட்டுக் கொண்டிருந்தது. போகபூமியைக் காட்டிலும் சிறந்து விளங்கிய அந்தச் செயற்கை நகரின் நூல்வெண் மாடங்கள் பாற்கடலின் அலைகளைப் போலக் காட்சி