பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யளித்தன. மொய்த்துக் கிடந்த படை வீரர்கள், கூட்டங் கூட்டமாக ஒய்வுபெற்றுக் கொண்டிருந்தனர்.

உதயணன் முதலியோர் இளைப்பாறி எழுந்ததும் பக்கத்திலுள்ள சயந்தி நகரத்திற்குச் செல்லுவதற்குத் திட்டமிட்டனர். மேருமலை மேல் எழுந்த செங்கதிர்ச் செல்வன் போல அழகிற் சிறந்த யானை ஒன்றின்மீது ஏறி அமர்ந்தான் உதயணன். வயந்தகனும் இடிவகனும் பக்கத்தே வேறு யானைகளின்மீது ஏறி வரலாயினர். இருபுறமும் யானைகள் சூழ நடுவில் உதயணன் இருந்த தோற்றம், சுற்றிலும் கரு முகில் இருப்ப நடுவே சுடர் இருந்ததென விளங்கிற்று. அவன் தலைக்குமேலே நிழல் செய்து கொண்டிருந்த, வெண்கொற்றக்குடை, தண்மதி போலத் தெரிந்தது.

நிரை நிரையாக வில்லும் வாளும் வேலும் கேடயமும் ஏந்திப் படைகள் பின்சென்றன. யானை புரவி தேர் முதலியன வரிசையாகப் பின்பற்றிப் போயின. பொதியிற் சந்தனமும் விந்தியத்து யானைக் கொம்புகளும் மேருமலைப் பொன்னும் குடகடலிற் பிறந்த படர்கொடிப் பவழமும் தென்கடற் பிறந்த மின்னொளி முத்தும் ஈழத்துச் செப்பும் இமயத்து வயிரமும் ஆகிய அலங்காரப் பொருள் பல ஏந்திய ஏவலிளையர் அவர்களுக்குப் பின்னே சென்றனர். யவனத்துத் தச்சரும் அவந்தி நாட்டுக் கொல்லரும் மகதநாட்டு மணிவினைஞரும் பாடலி நாட்டுப் பொற்றொழிலாளரும் கோசலத்து ஒவியரும் வத்தவநாட்டு வண்ணக்கம்மரும் ஆகிய தொழிற் செல்வர்களின் கலைக் கூட்டம் அப்பால் போயிற்று. காட்டில் உதயணனுக்கு உதவவே இடவகன் வந்தான் எனினும், தனக்குப் பேரரசனாகிய உதயணனை அவன் அமைச்சருள் ஒருவனாகிய தான் காணச் செல்லும்போது தக்க மரியாதைகளுடன் செல்ல வேண்டும். அன்றியும் உதயணனை மணஞ் செய்துகொள்ள அவன் ஆருயிர்க் காதலி தத்தையும் உடன் வந்திருப்பதால் ஏற்ற அலங்காரப் பொருள்களுடனும் எதிர் கொள்ள வேண்டும் என்று கருதியே இவ்வாறு பல் பொருளும் பல வினைஞரும் கொண்டு வந்திருந்தான்